சென்னை: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் இம்மாதம் நடக்கவிருந்த காவலர் உடற்தகுதித் தேர்வுகள் ஏப்ரல் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சீருடைப்பணியாளர் தேர்வாணைய ஐஜி தீபக் தாமோர் காவல் துறை அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "2020ஆம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலர்கள், இரண்டாம் நிலை சிறைக் காப்பாளர்கள் (வார்டன்), தீயணைப்பு வீரர்கள் காலியிடப் பணியிடங்களை நிரப்பும் தேர்வை தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்திவருகிறது.
அதன்படி மார்ச் 8ஆம் தேதியன்று சான்றிதழ் சரிபார்த்தல், உடற்தகுதித் தேர்வு உள்ளிட்டவை நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் காவல் துறையினர் பந்தோபஸ்து உள்ளிட்ட பாதுகாப்புப் பணிகளில் பங்கேற்கவிருப்பதால் இம்மாதம் 8ஆம் தேதி நடக்கவிருந்த காவலர் தகுதித் தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி இந்தத் தேர்வுகள் நடைபெறும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலினை எதிர்த்துக் களம்காணும் ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப்?