சென்னை: ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப்பலன்களை வழங்குதல், ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டம் அமல் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று (ஜன.09) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் துவங்கினர்.
இந்த போராட்டத்திற்கு திமுகவின் தொழிற்சங்கமான தொமுச, காங்கிரஸ் தவிர்த்து பல்வேறு சங்கங்கள் தங்கள் ஆதரவினைத் தெரிவித்து போராட்டத்தில் தங்களை ஈடுபடுத்தினர். தொமுச சங்கத்தினர் மற்றும் தற்காலிக ஓட்டுநர்களைப் பயன்படுத்தி தமிழக அரசு நேற்று முதல் பேருந்துகளைத் தொடர்ந்து இயக்கி வந்தது.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இன்று விசாரணைக்கு வந்த போது இருதரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள தொழிலாளர்கள் நாளை (ஜன.11) முதல் போராட்டத்தைக் கைவிட்டு வேலைக்குத் திரும்ப வேண்டும். தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் ஜனவரி 19ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதனையடுத்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், போக்குவரத்து தொழிலாளர்கள் துவங்கிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், 19ஆம் தேதி பேச்சு வார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி கமலக்கண்ணன், 20ஆம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளார்.