ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் இன்று (பிப்.25) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து கழக ஊழியர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர். இது குறித்து அரசின் சமரச பேச்சுவார்த்தைக்கு அவர்கள் உடன்படவில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
"இதுவரை இரண்டு முறை போக்குவரத்து ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. கரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு வருடமாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த முடியாத சூழ்நிலை நிலவியது.
அதன்பிறகு இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அப்போது அவர்களின் கோரிக்கைகளை முதலமைச்சரிடம் எடுத்துச் சொன்னோம். இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என போக்குவரத்து ஊழியர்களிடம் தெரிவித்திருந்தேன்.
இந்நிலையில் இன்று (பிப்.25) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்து உள்ளார்கள். கரோனா காலத்தில்கூட போக்குவரத்து தொழிலாளர்கள் உள்பட தமிழ்நாட்டில் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு ஊதியம் வழங்கப்பட்டது. தற்போது பேச்சுவார்த்தை காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் அவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு ஒன்பது மாதம் நிலுவைத் தொகை - 2019 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை 972 கோடி ரூபாய் கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் ஏப்ரல் வரை ஓய்வு பெற்றவர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இதையெல்லாம் போக்குவரத்து தொழிலாளர்கள் கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை கைவிட்டு விட்டு பணிக்குச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விரைவில் கலந்து பேசி இறுதி முடிவு எடுக்கப்படும். இன்று (பிப்.25) அனைத்துப் பேருந்துகளும் வழக்கம் போல் இயங்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்' - அமைச்சர் விஜயபாஸ்கர்