சென்னை: தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் 5 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினர். இந்த மனுவை சங்க பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம், தபால் வாயிலாக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார். அதில்
5 அம்ச கோரிக்கைகள்
- திரையரங்குகளின் மின்கட்டண உயர்வு , சொத்துவரி உயர்வு, ஊழியர்களின் சம்பள உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவு உயர்வு காரணமாக திரையரங்குகள் நடத்தமுடியாத சூழல் உள்ளதால், தற்போதுள்ள பராமரிப்புக் கட்டணத்தை ஏசி தியேட்டருக்கு 4 ரூபாயிலிருந்து 10 ரூபாயாகவும், ஏசி இல்லாத தியேட்டருக்கு 2 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக உயர்த்தித் தர வேண்டும்.
- ஆண்டிற்கு ஒருமுறை "C" படிவ உரிமம் புதுப்பிக்கும் முறையில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, அந்த முறையில் மாற்றம் செய்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும்படி அரசாணை வெளியிட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அப்போதுள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள விரும்புகிறோம்.
- சிறிய திரைப்படங்கள் வெளியாக திரையரங்குகள் கிடைப்பது சிரமமாக இருப்பதால், பெரிய திரையரங்குகளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட திரையரங்குகளாக மாற்றிக்கொள்ள முன்புபோல் அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் சிறு முதலீட்டு படங்கள் வெளிவர மிக வசதியாக இருக்கும்.
- திரையரங்க ஆபரேட்டர்களுக்கான தேர்வு நீண்ட காலமாக நடத்தப்படாததால் ஆபரேட்டர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. அதனால் புதிய ஆபரேட்டர்களை தேர்வு செய்ய சட்டம் இயற்றி வேலைவாய்ப்பை வழங்க வேண்டும் அல்லது ஆபரேட்டர் நியமனம் குறித்து அரசு விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.
- வணிக வளாகம் மற்றும் மல்டிபிளெக்ஸ் திரையரங்கத்திற்கு உள்ள டிக்கெட் கட்டணத்தையே தனித் திரையரங்கத்திற்கும் நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும்.
இதையும் படிங்க: முதல்ல ’டப்பிங்’க்கு வாங்க...! - விஜய் ஆண்டனியை ட்விட்டரில் கலாய்த்த சிஎஸ் அமுதன்