தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் மயில் அரசு விலைவாசி குறித்து செய்திகுறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது, “தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை தமிழ்நாடு அரசு முடக்கிவைத்து உத்தரவிட்டுள்ளதற்கும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி குறைக்கப்பட்டதற்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 18 மாதங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்றுவந்த ஈட்டிய விடுப்பை ஒப்படைப்புச் செய்து ஊதியம் பெறும் உரிமையை ஓராண்டுக்கு நிறுத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசைப் பின்பற்றி மாநில அரசு செய்துள்ள இச்செயலானது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த 18 மாதங்களுக்கு விலைவாசிப் புள்ளியை 1.7.2019 நிலையிலேயே வைத்திருப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்குமா? .
கரோனா நோய்த்தொற்றின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 34 நாள்கள் மட்டுமே ஆகியுள்ளது. ஒரு மாத காலத்திலேயே மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டு தனது ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை ரத்து செய்யக்கூடிய அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது.அடுத்த 18 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வை முன்கூட்டியே ரத்து செய்துள்ளது என்பது கரோனாவைக் காரணம் காட்டி மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே தோன்றுகிறது.
மேலும், தமிழ்நாட்டில் கரோனா தொற்று ஒழிப்பு நடவடிக்கையில் தங்களுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது அகவிலைப்படி உயர்வையும், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பையும் ரத்து செய்துள்ள செயல் என்பது கரோனா கொடுமையை விட மிகப்பெரிய கொடுமையாகவே ஆசிரியர்கள், அரசு ஊழியர்களால் பார்க்கப்படுகிறது.
கரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நிதி திரட்டுவதற்கு மத்திய, மாநில அரசுகளுக்கு எத்தனையோ வழிகள் உள்ளன. நாட்டின் பெருமுதலாளிகளுக்கு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வரிச்சலுகை, பல லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் தள்ளுபடி, பல லட்சம் கோடி ரூபாய் செலவில் ஆடம்பரத் திட்டங்கள் ஆகியவற்றைச் செயல்படுத்தும் மத்திய, மாநில அரசுகள் 'ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி’ என்பதைப் போல் தனது ஊழியர்களின் தலையில் கை வைப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
எனவே, தமிழ்நாடு அரசு அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றை நிறுத்திவைத்து வெளியிட்டுள்ள அரசாணைகளை மறு பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 382 பேர் கைது