சென்னை: ஐ.டி. வேலை, அதிக சம்பளம், சொகுசு வாழ்க்கை எனப்போலி நிறுவனங்களில் ஆசை வார்த்தைகளை நம்பி தமிழர்கள் உள்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாய்லாந்து மற்றும் மியான்மர் நாடுளுக்கு வேலைக்குச்சென்று அங்குள்ள சட்டவிரோத மோசடி கும்பலிடம் சிக்கித்தவித்து வருகின்றனர்.
சட்டவிரோத தகவல் தொழில்நுட்ப வேலை, ஆன்லைன் பண மோசடி உள்ளிட்ட வேலைகளை செய்யக்கூறி தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாகத் தகவல் வெளியானது. சட்ட விரோத மோசடிக் கும்பலிடம் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதையடுத்து முதற்கட்டமாக 18 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழ்நாடு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 8 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சகம் சார்பில் மியான்மரில் சிக்கித்தவித்த 8 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் வந்த 8 தமிழர்களுக்கு வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்பு அளித்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து வாகனம் மூலம் 8 பேரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை 26 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்ளை மீட்கும் பணி தொடர்ந்து நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மீட்கப்பட்ட முஹிசின் கூறியதாவது, ’நாங்கள் மின்னஞ்சல் மூலம் தூதரகத்திற்கு புகார் அளித்தோம், ஆனால் நான் வேலை செய்கின்ற இடத்தில் 600 டாலர் கொடுத்தால் தான் எங்களை அனுப்புவோம் என்று கூறினார்கள். நாங்கள் திரும்ப தூதரகத்தில் புகார் அளித்தோம். அவர்கள் தமிழ்நாடு அரசு மூலமாக அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து அதன் அடிப்படையில் எங்களை அவர்கள் விடுவித்தார்கள். அதன் பிறகு தான் தமிழ்நாடு அரசு எங்களை காப்பாற்றினார்கள்’ என்றார்.
இதையும் படிங்க: மதுரையில் பட்டாசு ஆலை வெடி விபத்து: 5 பேர் உயிரிழப்பு!