சென்னை: இந்திய அளவில் திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி முறையில் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களில் முதல் சுற்றிலேயே தேசியத் தர உத்தரவாத கழகத்தின் (NAAC) தர மதிப்பீட்டு புள்ளி நான்கிற்கு 3.32 புள்ளிகள் பெற்று தகுதியைப் பெற்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் முதல் சுற்றிலேயே தரவரிசையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களுக்கான தேசியத் தர உத்தரவாத கழகத்தின் விதிமுறைகளின்படி கற்றல்-கற்பித்தல், மதிப்பீடு, ஆராய்ச்சி, புத்தாக்கம் விரிவாக்கப் பணிகள் (Innovation and expansion works), உள்கட்டமைப்புகள், கற்றல் வளங்கள், மாணவர்கள் உதவி மற்றும் முன்னேற்றம் கோரிக்கைகளுக்கான தீர்வுகள், தலைமைத்துவம் மற்றும் மேலாண்மை, சிறப்புச் செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழு அளவுகோல்களைக் கொண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அவற்றின் அடிப்படையில் தேசியத் தர உத்தரவாத கழகத்தின் (NAAC) ஐந்துபேர் கொண்ட வல்லுநர் குழு, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி வருகை தந்து 21ஆம் தேதி வரை, பல்கலைக்கழகத்தின் வளாகங்களில் செயல்படும் பல்வேறு கல்விப் புலங்கள், நிர்வாகப் பிரிவு மையங்கள், பல்வேறு செயல்பாடுகளின் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள பிரிவுகள், சமுதாயக் கல்லூரிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தது.
வல்லுநர் குழுவிற்கு பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கல்வி சார் செயல்பாடுகள் பல்கலைக்கழகம் சார்பாக எடுத்துரைக்கப்பட்டது. 210 கற்போர் உதவி மையங்கள், 10 சமுதாயக் கல்லூரிகள், சிறப்பான உள்கட்டமைப்புகளைக் கொண்டு, அனைவருக்கும் தரமான உயர்கல்வியை வழங்குவது குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகம், பின்தங்கிய பகுதிகளில் வாழும் பழங்குடியினர், திருநங்கைகள், சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினர் ஆகியோருக்கு உயர்கல்வியை வழங்க எடுத்துவரும் முயற்சிகளுக்குத் தேசியத் தர உத்தரவாத கழகத்தின் வல்லுநர் குழுவினர் பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
தேசியத் தர உத்தரவாத கழகத்தின் (NAAC) A+ தரவரிசை என்பது தமிழ்நாடு நிறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 21 ஆண்டுகால கடின உழைப்பிற்கு கிடைத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவிக்கின்றது. மேலும் தற்போது 11 லட்சம் மாணவர்கள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயனடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
தேசியத் தர உத்தரவாத கழகத்தின் தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றதன் மூலம் பல்கலைக்கழக மானிய குழுவின் (UGC) அனுமதியோடு ஆன்லைன் படிப்புகளை வழங்குவதற்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தகுதிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Parliament Adjourned : எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. 11வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!