சென்னை: கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம், செப்டம்பர் 14ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகைக் கூட்டரங்கத்தில் நடைபெறும் என்று தமிழ்நாடு சட்டபேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பட்ஜெட் தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும் வகையில் மார்ச் 9ஆம் தேதி முதல் ஏப்ரல் 9ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தத் திட்டமிடப்பட்டது. மார்ச் 9ஆம் தேதி முதல் மார்ச் 24ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற்றது. கரோனா காரணமாக மாநிலத்தில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, அதன் பின்னர் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போது கரோனா காலகட்டத்தில் தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையை நடத்த போதுமான இடவசதி இல்லை. எனவே, நெருக்கடியான இடத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையை கூட்டுவதைத் தவிர்க்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. செப்டம்பர் மாதத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றால் அங்கு 234 உறுப்பினர்கள் அமர்வது மட்டுமல்ல, 256 துறைகளின் செயலர்கள், அதன் ஊழியர்கள் என ஆயிரக்கணக்க்கானோர் இயங்க வேண்டும்.
கோப்புகளை எடுத்து வரவேண்டும், பத்திரிகையாளர்கள், உயர் அலுவலர்கள், காவலர்கள் என நூற்றுக்கணக்கானோர் ஒரே இடத்தில் குவியும் நிலை ஏற்படும். வாகனங்கள் நிறுத்த இடம் வேண்டும். இதுபோன்ற பல பிரச்னைகள் உள்ளன.
இதனால், சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தை நடத்த அரசு திட்டமிட்டது. இதற்காக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன், சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் ஆகியோர் இன்று (செப்.01) கலைவாணர் அரங்கில் ஆய்வு நடத்தினர்.
சட்டப்பேரவையை நடத்துவதற்கு போதுமான இடவசதி உள்ளதா, காற்றோட்ட வசதி உள்ளதா, எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பன குறித்து இருவரும் ஆய்வு செய்தனர். இந்நிலையில், வருகின்ற 14ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தொடருக்கு முன்னதாக அனைத்து எம்எல்ஏக்களும் கரோனா பரிசோதனை கட்டாயம் செய்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.