சென்னை: சமூக வலைதளம் மூலமாக போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகனங்கள் குறித்து போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன் பொதுமக்கள் புகார் அளித்தால், அதன் மீது சென்னை காவல்துறை உரிய விசாரணை மேற்கொண்டு வழக்கும், அபராதமும் விதிக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இது போன்ற புகார்களில் சராசரி மனிதனாக இருந்தாலும் மிகப்பெரிய அதிகாரியாக இருந்தாலும் சென்னை காவல்துறை பாரபட்சம் இன்றி அபராதம் விதித்து வருகிறது.
நடிகர் விஜயின் கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாக சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 500 ரூபாய் அபராதம் சென்னை போக்குவரத்து காவல்துறை விதித்தது. அதுமட்டுமின்றி காவல்துறையை சேர்ந்த ஏடிஜிபி ஒருவரின் வாகனம் ஒரு வழி பாதையில் எதிர் திசையில் செல்வதை புகைப்படத்துடன் ஒருவர் புகார் அளித்ததன் பேரில் அபராதம் விதிக்கப்பட்டது.
இதே போன்று பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லா தன் சொகுசு காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியதாகவும் சொகுசு காரின் நிறத்தை விதிகளை மீறி மாற்றியது தொடர்பாகவும் புகார் அளிக்கப்பட்டதால் அபராதம் விதிக்கப்பட்டது.தற்போது சமூக வலைதளம் மூலம் அளிக்கப்பட்ட புகாரில் அமைச்சரின் அரசாங்க வாகனம் சிக்கி இருக்கிறது.
அதில் சிக்னல் போடப்பட்டிருந்தும் அரசாங்க வாகனம் ஒன்று, ஹாங்கிங் அதாவது தொடர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டு இடையூறு செய்ததாகவும், குறுக்கும் நெடுக்குமாக தாறுமாறாக சென்றதாகவும் புகைப்பட ஆதாரத்துடன் சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்தை இணைத்து இரண்டு தினங்களுக்கு முன்பு (டிச.6) ஒருவர் புகார் அளித்தார்.
அந்த புகைப்படத்தில் இருந்த TN 04 DG 1234 என்ற வாகன எண்ணை ஆய்வு செய்த பார்த்தபோது, அது சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பயன்படுத்தும் அரசாங்கம் வழங்கியுள்ள வாகனம் என தெரிகிறது. சட்டத்துறை அமைச்சர் வாகனமே போக்குவரத்து விதிகளை மீறி செயல்படுவது குறித்து சமூக வலைதளத்தில் பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.
இது தொடர்பாக புகாரை எடுத்துக் கொண்டதாகவும் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் விசாரிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கம் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த புகாரின் தன்மை குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குஜராத், இமாச்சல் வாக்கு எண்ணிக்கை: மகுடம் சூடப்போவது யார்?