சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அலுவலர்களுடன் கட்டுப்பாட்டு அறை, 108 கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இருந்தால் அரசுக்கு தெரிவிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் அதைத் தீர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, முதலமைச்சர் அறிவித்தார். அதன் அடிப்படையில் டிஎம்எஸ் வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கட்டுப்பாட்டு அறை மூலமாக தனியார் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் அனுப்பட்டது. 108 பொறுத்தவரையிலும், ஆயிரத்து 300 வாகனங்கள் தமிழ்நாட்டில் செய்யப்பட்டு வருகின்றன.
300 வாகனங்கள் கரோனா பணியில் ஈடுபட்டு வருகிறது. அதில், 100 வாகனங்கள் சென்னையில் உள்ளன. தற்போது 3 லட்சத்து 30 ஆயிரம் தடுப்பூசி செங்கல்பட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் தடுப்பூசி மூலம் 63 லட்சத்து 28 ஆயிரத்து 407 நபர்கள் பயன் அடைத்துள்ளனர். இதில் 9 லட்சத்து 56 ஆயிரத்து 701 பேர் கோவாக்சின் தடுப்பூசியும், 53 லட்சத்து 72 ஆயிரத்து 336 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசியும் செலுத்தி கொண்டுள்ளனர்.
18 வயதுக்கு மேல் உடையவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த 46 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தடுப்பூசி வந்த உடன் தடுப்பூசி செலுத்தப்படும். கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் ரெம்டெசிவிர் விற்பனை மையம் அமைக்கப்படும். சென்னையில் 202 தனியார் மருத்துவமனைகள் என, தமிழ்நாடு முழுவதும் 800 மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது தடுப்பூசி தேவை மக்களுக்குப் புரிந்துள்ளது.
எனவே இனிமேல் தடுப்பூசி வீணாகாமல் இருக்கும். நாளை(மே.9) சித்தா மருத்துவம் சென்னையில் தொடங்க உள்ளது. ரெம்டெசிவிர் பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்" என தெரிவித்தார்.