மாணவர் நலன் கருதி இந்தாண்டு பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, 12ஆம் வகுப்பு தேர்வு நடத்துவது குறித்த அறிக்கையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (ஜூன் 5) சமர்ப்பித்தார்.
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்களின் கல்வியிலும், பாதுகாப்பிலும் மிகுந்த அக்கறை கொண்ட தமிழ்நாடு அரசு, பொதுத்தேர்வுகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரையும் கலந்து ஆலோசித்து தகுந்த நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
12ஆம் வகுப்பு தேர்வு ரத்து
இது தொடர்பாக, கடந்த மூன்று தினங்களாக பள்ளியளவில் தொடங்கி, மாவட்டம் மற்றும் மாநில அளவில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொது சுகாதாரம் மற்றும் உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் கருத்துக்கள் கவனமுடன் கேட்டறியப்பட்டன.
பல்வேறு தரப்பினரும் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆதரவாகவும், மறுத்தும் கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும், அனைத்துத் தரப்பினரும் மாணவர்களின் உடல் மற்றும் மனநலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் உறுதியாக உள்ளனர். அவர்களது அறிவுரை மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் வரப்பெற்ற ஆலோசனைகளின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது.
மதிப்பெண் குழு அமைப்பு
இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பதனை முடிவு செய்ய, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில், உயர்கல்வித் துறை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் , பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்படும். இக்குழு மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆய்வு செய்து, விரைவில் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் . இக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில், பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
நீட் தேர்வு
மதிப்பெண் குழு மூலம் வழங்கப்படும் மதிப்பெண்களைக் கொண்டு மட்டுமே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சேர்க்கை நடைபெறும். பெருந்தொற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் “ நீட் ' போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது.
இது குறித்த அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில், உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மாணவர்களின் உடல் நலன் மற்றும் மனநலனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வித் திட்ட அடிப்படையில், உயர்கல்வி சேர்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்’ என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து