சென்னை: ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: "ஆவின் நிறுவனமானது 3.87 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம், இந்த நிதியாண்டில் நாளொன்றுக்கு சராசரியாக 32.98 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
மேலும், பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்குத் தேவையான கலப்புத் தீவனத்தையும், கால்நடை மருத்துவ வசதிகளையும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் வாயிலாக ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு 05.11.2022 முதல் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டு, பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கமே, பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும், நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்வதுமேயாகும். இந்தச் சூழ்நிலையில், இடுபொருட்களின் விலை உயர்வு, உற்பத்திச் செலவினம் ஆகியவை அதிகரித்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்கிட பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தக் கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டு இடுபொருட்களின் விலை உயர்வை ஈடுசெய்திடவும், பால் உற்பத்தியை உயர்த்தி, கூட்டுறவு நிறுவனமான ஆவினுக்கு வழங்கிட வழிவகுத்திடவும், பால் கொள்முதல் விலையை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் டிச.18 முதல் ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாய் ஊக்கத்தொகையாக ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக பசும்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.35லிருந்து ரூ.38 ஆகவும், எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.44 லிருந்து ரூ.47 ஆகவும் உயரும்.
இந்த விலை உயர்வால் சுமார் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். பால் உற்பத்தியாளர்களின் நலனையும், நுகர்வோர் நலனையும் பாதுகாத்திடத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆவின் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து வழங்கும்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அழைப்பு.. வெள்ள நிவாரணப் பணிக்கு பிறகு சந்திப்பதாக முதலமைச்சர் தரப்பில் தகவல்