சென்னை: சென்னை பல்கலைக்கழக 164ஆவது பட்டமளிப்பு விழா வரும் மே 16ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்க்கவுள்ளதாக, பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை பல்கழைக்கழக பதிவாளர் என்.மதிவாணன் மே 10ஆம் தேதி அன்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், “சென்னை பல்கலைக்கழகத்தின் 164ஆவது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் மே 16ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமையேற்று விழா பேருரை ஆற்றுகிறார். பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா பேருரை ஆற்றுகிறார். பல்கலைக்கழக இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசின் ஆலோசனையை பெறாமலேயே ஆளுநர் நியமனம் செய்து வருகிறார். தமிழ்நாடு அரசின்கீழ் உள்ள பல்கலைக்கழக சட்டங்களில் உரிய திருத்தம் செய்து, பல்கலைக்கழகத் துணை வேந்தரை மாநில அரசே நியமிக்கும் வகையில் சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டு, மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 164ஆவது பட்டமளிப்பு விழாவில், ஆளுநரும், முதலமைச்சரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.