சென்னை: டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 5) நேரமில்லா நேரத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாமக, விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பி ராஜா, "மாநில அரசின் எந்தவித கவனத்திற்கு கொண்டு வராமலும், தன்னிச்சையாகவும் நிலக்கரி எடுப்பது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் ஆய்வு செய்தல் மற்றும் பிரித்தெடுத்தல் கூடாது என ஏற்கனவே சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று வந்துள்ள அறிவிப்பு சட்டத்திற்கு புறம்பானது. அந்த அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்" என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், "காவிரி டெல்டா பகுதியில் விவசாயத்தைத் தவிர எந்த தொழிற்சாலைகளும் வரக்கூடாது என்பதால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்காக அவருக்கு பாராட்டு விழா நடத்திய விவசாயிகள் 'காவிரி காப்பாளன்' என்ற பட்டத்தை வழங்கினர். டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுப்பதற்கு ஓராண்டாக நடைபெறும் டெண்டர் நடவடிக்கை, திமுக அரசுக்கு தெரியாமல் போனது எப்படி?" எனவும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் சட்டமன்றக்குழுத் தலைவர் செல்வப் பெருந்தகை பேசியபோது, "மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கு எதிரானது என்பதற்கு இந்த திட்டம் ஒரு உதாரணம். வேளாண் மண்டலம் எனத் தெரிந்தும் தமிழ்நாடு அரசை கலந்து ஆலோசிக்காமல் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது ஜனநாயகப் படுகொலை. முதலமைச்சர் கடிதத்திற்கு மதிப்பளித்து அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.
அதிமுக உறுப்பினர் வைத்திலிங்கம் பேசுகையில், "காவிரி டெல்டா வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீத்தேன், நிலக்கரி ஆகியவற்றை எடுக்க முடியாது. கொந்தளித்து போயிருக்கும் மக்களின் பதற்றத்தை தவிர்க்கும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்" என்றார். இதே கருத்தை வலியுறுத்தி பாமக உறுப்பினர் ஜி.கே.மணி, விசிக உறுப்பினர் சிந்தனைச் செல்வன், ஆகியோர் பேசினர்.
கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, "முதலமைச்சர் எவ்வளவு வேகமாக செயல்பட்டு உடனடியாக பிரதமரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அதிகாரிகளும் மத்திய அரசின் நிலக்கரி துறையைத் தொடர்பு கொண்டு அடுத்தகட்ட மேல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு ஒருபோதும் இத்திட்டத்தை அனுமதிக்காது என்பது, மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.
அமைச்சரின் விளக்கத்திற்குப் பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்த செய்தியை கண்டு உறுப்பினர்களை போலவே நானும் அதிர்ச்சிக்குள்ளானேன். செய்தி வெளியானதும் தொடர்புள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அந்த கடிதத்தை டி.ஆர்.பாலு மூலம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு வழங்க அறிவுறுத்திய நிலையில், தொலைபேசி மூலம் பேசிய டி.ஆர்.பாலுவிடம் முதலமைச்சரின் கடிதத்தின் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக மத்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார். நானும் டெல்டாக்காரன் தான். உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதைப் போலவே, நானும் உறுதியாக இருப்பேன். டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழ்நாடு அரசு நிச்சயம் அனுமதி வழங்காது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கூட்டணி விவகாரத்தில் அண்ணாமலை கருத்தை ஏற்க முடியாது - ஜெயக்குமார் திட்டவட்டம்!