சென்னை: தமிழ்நாட்டில் கரோனா பரவல் இரண்டாம் அலை வேகமெடுத்துள்ள நிலையில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது. இருப்பினும் மக்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான விழிப்புணர்வு போதுமான அளவு இல்லை. இதன் காரணமாக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில், மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் ஒன்றான டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இங்கு 26,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் முகக்கவசம், சானிடைசர், கையுறை ஆகிய பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்தி பணியாற்றி வந்த நிலையில் தற்போது அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை டாஸ்மாக் நிர்வாகம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக ஊழியர்களை வயது வாரியாக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அவர்களைத் தொடர்ந்து மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, வழிபாட்டு தலங்கள், போக்குவரத்து உள்ளிட்ட பலவற்றிற்கு கட்டுப்பாடுகள் விதித்த நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துவந்தது. இதையடுத்து, ஊழியர்களுக்கு தற்போது கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.