சென்னை: நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் விசாரணை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்ஷேனா தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "ஏற்கெனவே உயர் நீதிமன்ற உத்தரவிட்டதின்படி, ஆக்கிரமிப்புகளை தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
ஜிபிஎஸ் மூலம் வரைபடம்
சித்தாலபாக்கம் ஏரியைப் பொறுத்தவரை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியருடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அந்த கூட்டத்தில், நீர் நிலைகளின் எல்லைகள் குறித்து சென்னை முழுவதும், ஜிபிஎஸ் (GPS) கருவி மூலம் வரைபடம் தயாரிக்கப்பட்டு, உள்ளூர் அளவில், கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறை அலுவலர், நலச் சங்க உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் எனக் குழு அமைத்து மாதம்தோறும் கண்காணிக்கப்படுகிறது.
நீர்நிலை ஆக்கிரமிப்புகளை கண்டறிய ஜிபிஎஸ் கருவி பொருத்தி முன்னோடி திட்டமாக சிட்லபாக்கம் ஏரியில் முதல் கட்டமாக அமல்படுத்தப்படவுள்ளது. நீர் நிலைகளை மீட்டு அதைப் பாதுகாப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்படும்.
மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை
மாவட்ட ஆட்சியர் தலைமையில் நீர்நிலை ஆக்கிரமித்து குடியிருந்தவர்களுக்கு மறுகுடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கடந்த மாதம் தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்புத் தரப்பட மாட்டது. சம்பந்தப்பட்ட நிலத்தைப் பதிவு செய்வதற்கு முன்னாள் பதிவுத் துறை அதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நீர்நிலை புறம்போக்கு இடங்களில் எந்தவித அரசு அலுவலகங்களும் கட்டப்படக்கூடாது. முக்கியமான நீர்நிலைகளின் எல்லைகளை நிர்ணயித்து எல்லைக் கற்கள் நடப்படும்.
நீர்நிலைகள் சீரமைப்பு
உள்ளாட்சி அமைப்புகளில் சுமார் 9,802 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அதில் 5,178 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 210 நீர்நிலைகள் சீரமைக்கப்படும். இதில் 147 நீர்நிலைகள் ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்பாக மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டுள்ள இடங்களில் வீட்டு வரி விதிக்கப்பட மாட்டாது, அங்கீகாரம் வழங்கப்படமாட்டாது.
தமிழ்நாடு அரசு நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்கவும் அனைத்து விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி தரப்பை எச்சரித்த நீதிபதி