2020-21ஆம் கல்வி ஆண்டில் கரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலை நிலவி வருகிறது. இந்தக் கல்வி ஆண்டிற்கு தேவையான அனைத்துப் பாடநூல்களும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் அச்சிடப்பட்டு மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் கல்வி ஆண்டில் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் 12ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டு முதல் எட்டாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வழங்கப்பட்டு வருகின்றன.
கரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு காலதாமதம் ஆகியுள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்குதல் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று, ஆறு, ஒன்பதாம் வகுப்புகளுக்கும், பள்ளி மாறுதலில் வரும் சில மாணவர்களுக்கு பிற வகுப்புகளுக்கும் ( இரண்டு முதல் பத்தாம் வகுப்பு) ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் புதிதாக மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டாலும் அவர்களின் பெற்றோர்கள் அளிக்கும் ஆவணத்தின் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் சேருவதற்கு ஆர்வம் காட்டினால் ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர் வீதம் வரவழைத்து சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஏற்கனவே ஐந்து, எட்டாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் பெயர் பட்டியல் மற்றும் பெற்றோர்களின் செல்போன் எண்களை பெறவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் பெற்றோர்களை தொடர்பு கொண்டு மாணவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்புக்கு ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் புதிய மாணவர் சேர்க்கை நடபெறும். புதிய சேர்க்கை செய்யும் நாளில் மாணவர்களுக்கு அரசு வழங்கும் விலையில்லா பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், புத்தகப்பை, சீருடை மற்றும் இதர கல்வி சார்ந்த பொருள்களையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அதேபோல் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு 25 விழுக்காடு இட ஒதுக்கீட்டிற்கான சேர்க்கை செய்வதற்கான பணிகளை மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநரகம் தொடங்கவுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தங்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண்களில் குறைகள் இருந்தால் அதனை ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் சரிசெய்வதற்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.