சென்னை: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் இன்று (பிப்ரவரி14) முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் குறித்து அக்கழகத்தின் மாநிலத் தலைவர் மணிவாசகன் கூறும்போது, "பொது இடமாறுதல் கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்க தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணி நிறைவு செய்திருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாதம் 11, 12ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடத்தப்பட்டால் முதுகலை ஆசிரியர்களுக்கு உள்ள காலிப்பணியிடங்களில் 1200-க்கும் மேற்பட்ட இடங்கள் பறிபோகும். எனவே பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தக் கூடாது.
முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பொது இடமாறுதல் கலந்தாய்விற்குப் பிறகு பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த வேண்டும். தங்கள் கோரிக்கை ஏற்கப்படாதபட்சத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு போராட்டம் நடத்தப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வினாத்தாள் வெளியான விவகாரம்: 2 தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை