சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதிகள் எண்.110 ன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1 ஆம் நாள் உள்ளாட்சிகளின் தினமாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பிற்கிணங்க உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாட்டில் ஒளிவுமறைவற்ற வெளிப்படைத் தன்மை ஏற்படுத்த வேண்டியும், உள்ளாட்சி அமைப்புகளின் சாதனைகள் மற்றும் திட்டச் செயலாக்கங்கள் குறித்து தகவல், கல்வி மற்றும் தொலை தொடர்பு இயக்கங்கள் நடத்தவும் ஏதுவாக நவம்பர் 1 ஆம் நாள் உள்ளாட்சி தினமாகக் கொண்டாட ஆவண செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இதுவரை வருடத்திற்கு 4 முறை கிராமசபைகள் முறையே சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), தொழிலாளர் தினம் (மே 1), குடியரசு தினம் (ஐனவரி 26) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) நடத்தப்பட்டு வந்தன. தற்போது முதலமைச்சர் ஆணைப்படி வருடத்திற்கு 6 முறை நடத்தப்படும். அதாவது கூடுதலாக உள்ளாட்சிகள் தினம் (நவம்பர் 1) மற்றும் உலக தண்ணீர் தினம் (மார்ச் 22) ஆகிய தினங்களில் நடைபெறும்.
முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க 2022-ஆம் ஆண்டு முதல் நவம்பர் 1-ஆம் நாள் உள்ளாட்சிகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்துதல், கண்காட்சி நடத்துதல், சிறந்த ஊழியர்களை அங்கீகரித்தல் மற்றும் கலந்துரையாடல் போன்ற நிகழ்வுகள் நடைபெற உள்ளது.
உள்ளாட்சி தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் நவம்பர் 1 ஆம் நாளினை உள்ளாட்சிகள் தினமாக அறிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தல், சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்படும் மகளிர் சுய உதவிகுழுக்களை கவுரவித்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட செயல்பாடு ஆகியன குறித்து விவாதிக்கப்படும்.
மேலும் கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை நிகழ்நேரத்தில் கண்காணித்திடும் வகையில் ‘நம்ம கிராம சபை’ என்கிற கணிணி/தொலைபேசி மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி கிராம சபை நிகழ்வுகளை கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளாட்சிகள் தினத்தன்று நடைபெறும் கிராமசபை கூட்டங்களில் ஊரக வாழ் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு விவாதத்தில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வேண்டுகோள்