சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் 2024ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
தந்தை பெரியாரின் பற்றாளரான சுப.வீரபாண்டியன் தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கலைமாமணி விருது பெற்றுள்ளதுடன் இதுவரை 54 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவரான சுப வீரபாண்டியனுக்கு தந்தை பெரியார் விருதினை முதலமைச்சர் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்தில், மலைவாழ் மக்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்பட்ட வன்கொடுமைகளுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தி நீதி பெற்றுத் தந்தவருமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பி.சண்முகத்திற்கு டாக்டர் அம்பேத்கர் விருதினை வழங்கி கௌரவித்தார் தமிழக முதலமைச்சர். தந்தை பெரியார் விருது பெற்ற சுப வீரபாண்டியன் மற்றும் அம்பேத்கர் விருது பெற்ற பி.சண்முகம் ஆகிய இருவருக்கும் தலா 5 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் விருது பாலமுருகனடிமை அவர்களுக்கும் ,பேரறிஞர் அண்ணா விருது பத்தமடை பரமசிவத்திற்கும் , பெருந்தலைவர் காமராஜர் விருது பலராமன் அவருக்கும், கவிஞர் பழனி பாரதிக்கு மகாகவி பாரதியார் விருதையும் முதலமைச்சர் வழங்கினார். மேலும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் முத்தரசுக்கும் ,தமிழ்த் தென்றல் திரு வி க விருது ஜெயசீல ஸ்டீபனுக்கும், முத்தமிழ் காவலர் கி ஆ பெ விஸ்வநாதன் விருது ரா கருணாநிதி உள்ளிட்ட அனைவருக்கும் 2 லட்சத்திற்கான காசோலைகளையும் வழங்கினார்.
பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்ற கவிஞர் முத்தரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், தமிழ்நாடு அரசு வீடுதோறும் தமிழ் குழந்தைகள் தமிழ் பயில வேண்டும் என ஒரு அரசாணை வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஏனெனில் ஒவ்வொரு வீட்டிலும் இன்று குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் வாயில் நுழையாத வண்ணமே இருக்கிறது எனவும் இந்த விருது விழா, தமிழ் ஊன்றுகோலூற்றி நிற்க நிச்சயம் ஊக்குவிக்கும் என தெரிவித்தார்.
டாக்டர் அம்பேத்கர் விருது பெற்ற பி.சண்முகம் கூறியதாவது, எனக்கு விருது வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி எனவும் ,எனக்கு கொடுக்கப்பட்ட தொகையான 5 லட்சத்தை மலை வாழ் மக்கள் நலனுக்காகப் போராடுபவர்களுக்கும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பிரித்துக் கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எப்போ பொங்கலிடணும்? பூஜை எப்படி செய்யணும்? முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கோங்க