சென்னை: நடிகர் விவேக் கடந்த ஆண்டு மறைந்தார். அவரின் நினைவாக அவர்தம் வசித்து வந்த பெருநகர சென்னை மாநகராட்சி, மண்டலம் - 10, பகுதி-29, வார்டு-128-ல் அமைத்துள்ள பத்மாவதி நகர் பிராதன சாலையினை அப்பகுதி வாழ் மக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" எனப் பெயர் மாற்றம் செய்திட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பெயர் மாற்ற வேண்டுமென அவரின் துணைவியாரும்; தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரான பூச்சி. S. முருகனும் கடந்த மாதம் 18ஆம் தேதி அன்று நடிகர் விவேக் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஏதேனும் ஒரு சாலை அல்லது தெருவிற்கு "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" எனப் பெயர் சூட்டுமாறு முதலமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து அவர் வசித்து வந்த பத்மாவதி நகர் பிரதான சாலையினை மாமன்றத்தின் பின்னேற்பு அனுமதிக்குட்பட்டு, "சின்னக் கலைவாணர் விவேக் சாலை" எனப் பெயர் மாற்றம் செய்ய பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் ஒப்புதல் அளித்தார். இதற்கேற்ப, உரிய பெயர் மாற்றத்தினை செய்து அரசாணை வெளியிடுமாறு பெருநகர சென்னை மாநகராட்சியின் முதன்மைச் செயலாளர் / ஆணையர் அவர்கள் அரசை கேட்டுக் கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் கோரிக்கையை ஏற்று இன்று தமிழ்நாடு அரசால் பெயர் மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி சார்பாக சாலையில் பெயரை குறிப்பிட்டு அங்கு பதாகை வைக்கப்பட்டது.