தமிழ்நாட்டின் 34ஆவது மாவட்டமாக கள்ளக்குறிச்சி நேற்று உதயமானது. அதன் தொடக்கவிழா நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, 'தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் கடந்த ஆண்டைப்போலவே இந்தாண்டும், பொங்கல் பரிசாக ரூபாய் 1,000 வழங்கப்படும்' என அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில்,தமிழக அரசு அரசாணை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அதில், ”வரும் ஜனவரி மாதம் பொங்கல் விழா வருவதையொட்டி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்கப்படும். அதோடு சேர்த்து, பொங்கல் பரிசுப் 'பை' ஒன்றும் வழங்கப்படும். அந்தப்பையில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டுகள் இரண்டு, 20 கிராம் முந்திரிப்பருப்பு, 20 கிராம் கிஸ்மிஸ், 5 கிராம் ஏலக்காய் ஆகியன இருக்கும். இதற்காக ரூ.2,363 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி அட்டைதாரர்களாக மாறவிரும்பினால், அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனால், பொங்கல் பரிசு பெறும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் பொங்கல் பரிசு திட்டத்தை, நாளை மறுநாள் முதல் தொடங்கி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்!