சென்னை ராயபுரத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் 15 பள்ளிகளைச் சேர்ந்த மூன்றாயிரத்து 491 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாட்டில் இதுவரை 54 லட்சத்து 36 ஆயிரம் மடிக்கணினிகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்தியாவில் குறைவான ஆடிட்டர்கள் மட்டுமே உள்ளதாகக் கூறிய அவர், அதனால், சி.ஏ. படிப்பை தமிழ்நாடு மாணவர்களிடையே கொண்டுச் செல்லும் வகையில் 11, 12ஆம் வகுப்பு முடிப்பவர்களுக்கு பயிற்சி வழங்கி தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுவருவதாகத் தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து தாங்கள் தெளிவாக இருப்பதாகச் சொன்ன செங்கோட்டையன், அதேபோன்று இருமொழிக் கல்வி கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது என்றார். இது குறித்து இந்திய பிரதமருக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய செங்கோட்டையன், நீட் தேர்வு பயிற்சியில் கடந்த ஆண்டைவிட இந்தாண்டு மாணவர்கள் அதிகளவில் தகுதி பெற்றுள்ளதாகக் கூறினார்.