சென்னை: நடிகர் தனுஷ் நடித்த 'மாரி' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். இவர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார்.
ரோபா சங்கர், சாலிகிராமம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (பிப்.15) திடீரென அவரது வீட்டில் நுழைந்த வனத்துறை அதிகாரிகள் வீட்டில் அனுமதியின்றி வளர்த்த 2 அலெக்சாண்டரின் பச்சைக்கிளிகளை மீட்டனர்.
ரோபோ சங்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இலங்கையில் உள்ள நிலையில், ரோபோ சங்கரின் அண்ணன் மகள் மற்றும் வீட்டில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் இருந்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கிளிகளைக் கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போது ரோபோ சங்கர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக ரோபோ சங்கரின் மனைவியின் தோழி ஒருவர் பணி மாறுதல் காரணமாக வேறு ஊருக்குச் செல்வதால் வீட்டில் வளர்த்த கிளியை வளர்க்கச்சொல்லி கிப்டாக கொடுத்ததாகவும், இரு கிளிகளுக்கும் 'பிகில்- ஏஞ்சல்' என பெயர் வைத்ததாகவும், இந்த வகைக் கிளிகளை வளர்க்கவேண்டும் என்பது நீண்டநாள் ஆசை இருந்த நிலையில் கிப்டாக கிடைத்ததால் வளர்த்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தங்களது மகள் பிகில் படத்தில் நடித்தப்பிறகு கிடைத்ததால் இந்த பெயரைச் சூட்டி வளர்த்ததாகவும், சங்கரை, ரோபோ என செல்லமாகப் பெயரிட்டும், அக்கா, அம்மா என வீட்டில் உள்ளவர்களை அழைத்ததாகவும் தெரிவித்துள்ளனர். பணம் கொடுத்து வாங்காமல், கிப்டாக கிடைத்ததால் வனத்துறையிடம் அனுமதி வாங்கவேண்டும் என்பது தங்களுக்குத் தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.வனத்துறையினரிடம் மறைக்கவேண்டும் என்ற எந்தத் திட்டமிட்ட நோக்கமும் இல்லை என்றும் இலங்கையிலிருந்து வந்ததும் நேரில் சென்று விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தனியார் யூடியூப் சேனலில் பாலா, புகழ் ஆகியோர் ரோபோ சங்கரின் ஹோம் டூர் வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும், அதில் இந்த கிளிகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் அது தங்களது கவனத்திற்கு வந்ததாகவும் அதன்பேரில் நடவடிக்கை எடுத்து இருப்பதாகவும், அவர்கள் இலங்கையிலிருந்து வந்ததும் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களின் பட்டியலில், 4ஆவது வகையில் உள்ள பச்சை கிளிகளை வீடுகளில் வளர்ப்பதும், விற்பதும் சட்டப்படி குற்றமாகும். வனவிலங்குகள் (பாதுகாப்பு) சட்டம், 1972 இல் பட்டியலிடப்பட்ட இந்தியப் பறவையான அலெக்ஸாண்டரின் கிளி வளர்ப்பவர்கள் பிடிபட்டால், 6 மாதம்வரை சிறை தண்டனை கிடைக்கும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பாசமாகக் குழந்தை போல வளர்த்த கிளிகள் தற்போது வனத்துறை அதிகாரிகளால் பறிபோகப் புகழும், பாலாவும் காரணமாக இருந்ததோடு, ரோபோ சங்கரைச் சிக்கலிலும் சிக்க வைத்துள்ளனர்.