சென்னை: நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேர் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனா். அவா்களை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதையடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு அவசர கடிதங்கள் எழுதினார்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம், தமிழக மீனவர்கள் 12 பேரையும் விடுதலை செய்தது. அதோடு விடுவிக்கப்பட்ட நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். இதையடுத்து இந்திய தூதராக அதிகாரிகள் மீனவா்கள் 12 பேருக்கும் பாஸ்போர்ட், விசா இல்லாததால், எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கினர்.
அதோடு 12 மீனவர்களையும் இன்று இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து புறப்படும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவா்களை வரவேற்று அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஜிபிஎஸ் டிராக்கிங் செய்து திருடு போன பைக்கை மீட்ட உரிமையாளர்... சகோதரர்களுக்கு தர்மஅடி...