சென்னை: சமீப காலமாக தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடந்து அதிகளவில் நிகழ்ந்து வருகிறது. அவர்கள் கைது செய்வதும் அதன்பின் தமிழ்நாட்டில் இருந்து வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதி மீட்பதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழ்நாடு ராமேஸ்வரம் மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள், நாகை மாவட்டத்தை சேர்ந்த 7 மீனவர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த 6 மீனவர்கள், கடலூரை சேர்ந்த 2 மீனவர்கள் என மொத்தம் 22 பேர் கடந்த மாதம் 22 ஆம் தேதி இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடற்படை போலீசார் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி 22 மீனவர்களை கைது செய்தனா்.
பின்னர் படகுகளுடன் மீனவர்களையும் இலங்கைக்கு கொண்டு சென்று நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கையால் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இலங்கை அரசிடம் பேசினார்கள்.
இந்த நிலையில் ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை, கடலூர் சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. பின்னர் மீனவர்கள் 22 பேரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்த 22 மீனவா்களுக்கும் அவசர கால சான்று வழங்கப்பட்டு கொழும்பில் இருந்து விமானத்தில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திற்கு வந்த மீனவர்களை பாஜக சார்பில் மாநில மீனவரணி தலைவர் நீலாங்கரை, முனுசாமி ஆகியோர் சால்வை அணிவித்து உணவு பொருட்கள் தந்து வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவா்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர்.
அதாவது, கடந்த ஜூன் மாதம் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 22 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் நிபந்தனைகளுடன் விடுதலை செய்தது. அதில், மீண்டும் கைதானால் 2 - 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவித்து நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த சில நாட்களுக்கு முன், மீன்பிடித்தடைக் காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது ஜூலை 7 ஆம் தேதி காலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 15 மீனவர்களையும் படகுகளுடன் கைது செய்ததது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
இதைத் தொடர்ந்து, ஜுலை 9 ஆம் தேதி அதிகாலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 15 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்கள் சென்ற 2 படகுகளையும் சிறைபிடித்தனர். பின்னர் அந்த 15 பேரும் காங்கேசம் துறைமுகத்தில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆண்களை விட பெண்கள் 2 மடங்கு அதிகம் - மனோன்மணியம் பல்கலை சுவாரஸ்யம்!