சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஜூலை 22ஆம் தேதி திருவொற்றியூர் திருச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமாகினர். மீனவர்கள் மாயமாகி 55 நாள்களுக்குப் பிறகு மியான்மர் நாட்டில் விசைப்படகு ஒன்று கரை ஒதுங்கியிருப்பதாக மியான்மர் நாட்டு கடலோரக் காவல் படையினர் தகவல் தெரிவித்தனர்.
அங்கு நிலவும் மோசமான வானிலையால் மீனவர்களை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்துவர வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் நேற்று (செப். 29) காலை சிறப்பு விமானம் மூலம் மீனவர்களை அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்ட போதிலும் வானிலை மாறுதல்களால் விமானம் இயக்கப்படாமல் தடைசெய்யப்பட்டது.
இந்நிலையில், எர்ணாவூர் சுனாமி குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மீனவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆறுதல் தெரிவித்தார். பின்னர் தனது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "வானிலை மாறுபாட்டால் மீனவர்களை அழைத்துவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கண்டிப்பாக அக்டோபர் 7ஆம் தேதி மீனவர்களை மியான்மர் நாட்டிலிருந்து சென்னைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜூலை மாதம் மாயமான மீனவர்களைத் தமிழ்நாடு மீன்வளத் துறை உடனடியாக அக்கறையுடன் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தால் அவர்கள் திசைமாறி மியான்மர் நாட்டுக்குச் சென்றிருக்க மாட்டார்கள். மாயமான மீனவர்கள் இருக்கும் இடத்தை உறவினர்களுக்குத் தெரிவித்த பின்னர்தான் மீன்வளத் துறை அலுவலர்களுக்கே தெரியுமளவிற்கு தமிழ்நாடு மீன்வளத் துறை நிலைமை இருக்கிறது" எனக் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: 'ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம்'