விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய பிரத சாகு தலைமை செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "நாங்குநேரியில் 66.10 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. விக்கிரவாண்டியில் 84.36 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது. இரு தொகுதிகளிலும் இன்று காலை முதல் பெரும்பாலும் வி.வி.பேட் பிரச்னைகள் ஏதும் இல்லை. இரண்டு இடங்களில் மழை பெய்தது. ஆனால் அதனால் எந்த பிரச்னையும் இல்லை.
2016ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் விக்கிரவாண்டியில் 81.25 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. அன்றைய வாக்குப்பதிவைக் காட்டிலும் இது 3 சதவிகிதம் அதிகம். 2016ஆம் ஆண்டு நாங்குநேரியில் 71.92 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. ஒட்டு மொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் நாளை காலை தெரிய வரும்" என்றார்.
வசந்தகுமார் குறித்துப் பேசிய அவர், "தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு அடிப்படையில், 143, 171 h, 130 (மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்) ஆகிய மூன்று பிரிவின் கீழ் வசந்த குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.