சென்னை தண்டையார்பேட்டையில் காங்கிரஸ் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பலராமனின் 75ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "நம்முடைய நாட்டில் ஒரு சிலர் தாய் மொழியை நேசிக்கிறேன் என்கிற பெயரில் அதை வெறித்தனமாக அரசியலாக மாற்றி விட்டார்கள். தமிழ் தேசிய அமைப்புதான் காங்கிரஸ் கட்சியின் பலம். தற்போது தேர்தல் முடிந்துள்ளது. நம்முடைய திறமையைக் காட்ட, ஐந்து ஆண்டுகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியை கட்டியமைத்து ராகுல் காந்தியின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் நாம் செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று செய்தி வருகிறது. அதிமுகவின் பண பலம் இங்கு எடுபடவில்லை. வேளச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்றது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமிருந்து தெளிவான பதில் வரவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.
இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போது, மத்திய அரசு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வது ஏன்? இதுகுறித்து உரிய விளக்கத்தை பிரதமர் மோடி அளிக்க வேண்டும். தேர்தல் முடிந்த அடுத்த நாளே உர விலை அதிகரிக்கிறது. இதை விட விவசாயிகளுக்கு துரோகம் செய்ய முடியாது. தன்னை, விவசாயி என்று கூறிவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எப்படி இதனை ஏற்றார். மேலும் இந்த நடவடிக்கைக்கு பதில் ஒரு முழம் கயிறு கொடுத்து, விவசாயிகளை தற்கொலை செய்து கொள்ள கூறியிருக்கலாம்" என்றும் தெரிவித்தார். மேலும், ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தால், மீண்டும் காங்கிரஸ் வேட்பாளர்தான் போட்டியிடுவார்" என்றார்.