சென்னை: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக, ஜூன் 13ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முதல் முறையாக அமலாக்கத்துறையினர் முன்பு ஆஜரானார். அன்று சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து இரண்டாவது நாளான (ஜூன் 14) சுமார் 10 மணி நேரம் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், இதைத்தொடர்ந்து மூன்றாவது நாளாக நேற்று (ஜுன் 15) அமலாக்கத்துறையினர் முன்பு ராகுல் காந்தி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணையில் சுமார் 30 மணி நேரத்திற்கு மேலாக ராகுலிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார். இந்த வழக்கில், ராகுல் காந்தி நாளை (ஜுன் 17) மீண்டும் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர்.
இதனிடையே, சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது , "இன்று இந்த ஜனநாயகத்தில் ஒரு துக்க நாள். 100 ஆண்டுகள் கடந்த காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் டெல்லி போலீசார் உள்ளே புகுந்து காங்கிரஸ் தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும் தடியடி நடத்தி அவர்களைத் தரையில் தள்ளிவிட்டு வன்முறை நிகழ்த்தியுள்ளனர்.
டெல்லி காங்கிரஸ் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளவர்களை நோக்கி காவல்துறை செல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. அதற்கு யார் அந்த உரிமையைக் கொடுத்தார்கள். காங்கிரஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளார்களா அல்லது இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார்களா. மோடியின் அரசாங்கம் நாம் எதிர்பார்த்ததை விட மோசமான திசையில் சென்று கொண்டு இருக்கின்றது. மோடி சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார்.
![நேஷனல் ஹெரால்டு பத்திரிகை எங்களது சொத்து - கே.எஸ்.அழகிரி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-06-alagiri-bjp-script-image-7209208_15062022201834_1506f_1655304514_250.jpg)
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை என்பது எங்களது சொத்து. தேர்தல் ஆணையத்திடமும் அதன் விபரங்களைத் தெரிவித்துள்ளோம். பாரதிய ஜனதாவிற்கும் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்குமா சொத்தை எழுதி தர முடியும். காங்கிரஸ் பெயரில் இருக்கும் சொத்தை காங்கிரஸ் கட்சிதான் நிருவகிக்க முடியும். இதில் எந்த வித தவறான பரிமாற்றமும் நடைபெறவில்லை.
எதற்காகப் பிரதமர் மோடி இதுபோல் செய்கிறார். இதற்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன சம்பந்தம், ஒரு சாதாரண சாலை விபத்தில் சிபிஐ விசாரணை செய்வது போல் இருக்கின்றது. இந்த நடைமுறை ஒரு அறக்கட்டளையில் தவறு நடந்தால் அறக்கட்டளை நிர்வாகிகள் தான் அதனை விசாரிக்க வேண்டும். எதற்காக அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும்.
மோசமான ஜனநாயக போக்கை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொள்ளாது. மத்திய பாஜக அரசின் இந்த செயலைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆளுநர் மாளிகையை நோக்கி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஜூன்.16) நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நாளை (ஜூன்.17) மாவட்ட தலைநகரங்களில் மத்திய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
![ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15572976_thudd.jpg)
மோடி அமித்ஷா ஆகியோரின் கடந்த கால வரலாறை பார்த்திருக்கின்றோம். போபாலில் என்ன செய்தார்கள்? எவ்வளவு பெரிய வன்முறை நடைபெற்றது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். ஆகவே அவர்கள் அப்படித்தான் வளர்க்கப்பட்டு இருக்கின்றனர். ஆர்எஸ்எஸ் பாஜகவின் தன்மை இப்படித்தான் இருக்கும், தாங்கள் யார் என்பதை இப்பொழுது காட்டிக் கொண்டிருக்கின்றார்கள்.
வன்முறையின் மீது நாட்டம் இருக்கக்கூடிய ஒரு அரசியல் இயக்கம் பாஜக. பாரதிய ஜனதா மிகப்பெரிய விளைவைச் சந்திக்க இருக்கின்றது. அவர்களுக்கான குழியை அவர்களே தோண்டி விட்டனர். எதிர்க்கருத்துக்களை ஜனநாயக முறையில் தத்துவார்த்தமான அடிப்படையில் எதிர்கொள்ள அவர்களுக்குத் தைரியம் கிடையாது.
பாஜக இந்து மதத்தில் இருக்கும் குறைகளை சொல்லாமல் நபிகள் நாயகம் மீது எதற்காகக் குறை சொல்ல வேண்டும். பாஜகவின் கருத்தை அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாயவில்லை, வளைகுடா நாடுகளுக்கு பயந்து அவர்கள் தற்போது அவர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வளைகுடா நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் இடிக்கப்பட்ட வீடுகள் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டது என்பது இப்போதுதான் தெரியுமா? யோகி பத்தாண்டுகளாக அங்கு ஆட்சியில் இருக்கின்றார். இதுவரை அது தெரியவில்லையா, மோடியும் யோகியும் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே புரியவில்லை.
![நேஷனல் ஹெரால்டு வழக்கு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15572976_thud.jpg)
முகம்மது நபிக்கு எதிராக பாரதீய ஜனதாவின் கூற்று தவறான கூற்று இதை இஸ்லாமியர்கள் தான் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். அதற்குப் பதிலாக அதற்கு ஆதரவாக இந்துக்களும் போராட வேண்டும். இந்துமதம் என்பது உலகத்தின் மிகச் சிறந்த மதம், மாற்றுக் கருத்துகளை அங்கீகரிக்கக் கூடிய ஒரு மதம் மிகப்பெரிய ஆன்மீகவாதிகள் தோன்றிய மதம் நமது நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்துவர்களுக்கும் சிறுபான்மையினருக்கும் நாம்தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இஸ்லாமிய மக்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் போராட உள்ளது இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.
மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாடு மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கின்றது அதனுடைய விளைவு தான் தற்போது பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதுபோல் ஆவின் நிறுவனத்தில் ஹெல்த் மிக்ஸ் பவுடர் கிடையாது. யாரோ ஒருவர் சொன்னதைக் கேட்டு அவர் தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு அவர் தனது தவற ஒப்புக்கொண்டு மறுப்பு தெரிவிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி உண்மையாகவே எதிர்க்கட்சியாக வர வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் பேராண்மையோடு நேர்மையாக ஒன்றைத் தெளிவுபடுத்த வேண்டும்.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம், எதிர்க்கட்சி வரிசையில் தனியாக நின்று எங்கள் தலைமையில் ஒரு கூட்டணி அமைப்போம் என்று கூற வேண்டும். அண்ணா திமுகவின் நிழலில் இருந்து கொண்டு நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று கூறுவது நான் தான் ரவுடி நான்தான் ரவுடி என திரைப்படத்தில் கூறுவது போல இருக்கின்றது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கின் வரலாறும்... முழுப் பின்னணியும்...