சென்னை: தமிழக சட்டப்பேரவை செயலர் கி.சீனிவாசனின் பதவி காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு, முதன்மை செயலாளராக அவருக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் பணி நீட்டிப்பை, ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் மற்றும் செயலாளர் ஹரிசங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று (30.11.2023) ஓய்வு பெற இருந்த சட்டமன்றப் பேரவைச் செயலர் கி.சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பும், முதன்மைச் செயலாளராகப் பதவி உயர்வும் வழங்கியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டு காலத்தில் முதன் முறையாக, அரசுப் பணியிலிருந்த சட்டமன்ற பேரவைச் செயலருக்கு பணிக்காலம் முடிந்த பிறகு, பணி நீட்டிப்பு மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில், அரசு ஊழியர்கள் ஒய்வு பெறும் வயது 60 என உயர்த்தப்பட்ட நிலையில், ஓய்வு பெறும் நிலையில் உள்ள சட்டமன்றப் பேரவைச் செயலருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும், முதலமைச்சர் கடந்த 2018 ஆம் ஆண்டு எதிர்கட்சித் தலைவராக இருந்த நிலையில், சீனிவாசனை சட்டமன்றப் பேரவைச் செயலராக நியமிப்பதற்கு எதிராக, "பேரவைத் தலைவர் விரும்புகிறார் என்பதற்காக விதிகளின் முதுகெலும்பை உடைக்க முடியாது. இதுவரை எந்த ஆட்சியிலும் நடந்திராத வகையில், பணிமூப்பு, கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகிய அனைத்து நெறிமுறைகளையும் மீறியது" என அறிக்கையினை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், “சட்டப்பேரவை விதிகளுக்கு எதிராகவும், பேரவைப் பணியாளர்களின் பதவி உயர்வு பெற வேண்டியவர்களைப் புறக்கணித்தும், ஒட்டு மொத்த தமிழக சட்டப்பேரவை ஊழியர்களையும், அதிகாரிகளையும் கடுமையான மன உளைச்சலுக்கும், அழுத்தத்திற்கும் உள்ளாக்கி, சட்டப்போவைச் செயலகப் பணிகளில் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது” என சட்டப்பேரவை ஊழியர் உள்ளத்தின் குமறல்களை எதிர்கட்சித் தலைவராக அப்போது வெளிப்படுத்தியிருந்தார்.
ஆனால், தமிழகத்தின் 16 வது சட்டமன்றப் பேரவையானது, பல்வேறு செயல்களில் இந்திய திருநாட்டிற்கு முன்னுதாரணமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் காலத்தில், தனி நபருக்காக பேரவையின் முதுகெலும்பு மீண்டும் வளைவது அழகல்ல. ஏற்கனவே, கி.சீனிவாசனுக்கு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் சிறப்பு செயலர் நிலையில், பதவி உயர்வு வழங்கியதற்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
எனவே, தமிழக முதலமைச்சர் சட்டமன்றப் பேரவைச் செயலர் கி.சீனிவாசனுக்கு வழங்கிய பணி நீட்டிப்பு மற்றும் பதவி உயர்வு ஆணையினை உடனடியாக ரத்து செய்து, தமிழக சட்டமன்றப் பேரவையின் மாண்பினைக் காத்திட வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மேடவாக்கத்தில் சாலையில் தேங்கிய மழை நீர்.. பள்ளம் இருப்பது தெரியாமல் கவிழ்ந்த ஆட்டோ!