சென்னை: விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை எக்கியார் குப்பத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் வாங்கி குடித்துள்ளனர். இதில் சங்கர், தரணிவேல், மண்ணாங்கட்டி, சந்திரன், சுரேஷ் ஆகியோர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை நடத்தி கள்ளச்சாராயம் குடித்த பலரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா, அவர்களது உறவினர் சின்னத்தம்பி, அவர் மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகியோர் கள்ளச்சாராயம் வாங்கி குடித்து உள்ளனர். இதனால் அஞ்சலி தவிர்த்து ஏனைய நான்கு பேரும் உயிர் இழந்தனர். மேலும் அஞ்சலி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்வது, பதுக்கி வைத்திருந்தது என அவ்வப்போது சிலர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உண்டு. தற்போது கள்ளச்சாராயத்தால் உயிர்பலி ஏற்பட்டிருப்பது தமிழகத்தை உலுக்கி உள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காத காரணத்தால் விழுப்புரம், செங்கல்பட்டில் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் ஏஎஸ்பிக்கள் தலைமையில் தனிப்படை அமைத்து, கள்ளச்சாராயம் விற்பனை, பதுக்கி வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஏற்கனவே கள்ளச்சாராய விற்பனையில் கைது செய்யப்பட்டவர்கள் தற்போது என்ன செய்கிறார்கள் என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்த உத்தரவிட்டு இருந்தார்.
இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருவதாலும், களநிலவரம் குறித்து அறிந்து கொள்ளவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் விரைந்துள்ளார். மேலும் முதலமைச்சர் விழுப்புரம் செல்வதையொட்டி டிஜிபி சைலேந்திரபாபுவும் விழுப்புரம் விரைந்துள்ளார்.
இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலருக்கு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் உயிர் இழப்பு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'அதிமுகவினரே கள்ளச்சாராயம் காய்ச்சினர்' - அமைச்சர் பொன்முடி பகீர் தகவல்!