சென்னை: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போது குடும்பத்தலைவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்து இருந்தது. தேர்தலிலும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் ஆன நிலையில் மகளிர் உரிமைத் தொகை எப்பொழுது வழங்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்துக் காத்து இருந்தனர்.
இந்நிலையில் மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் செப்.15 முதல் தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தார். மேலும் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்காக வரவு செலவு திட்டத்தில் ரூ. 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: 'இந்தியாவில் என்ன நடக்கிறது' - தாயகம் திரும்பிய பிரதமர் மோடி கேள்வி!
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் காலதாமதம் ஆனது குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. மேலும் தகுதி உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து எதிர்க்கட்சிகள் மேலும் கடுமையாக விமர்சிக்கத் துவங்கின. மேலும் பொதுமக்கள் மத்தியிலும் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை அளித்தது.
இருப்பினும் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதியானவர்கள் பட்டியலில் நமது பெயர் இடம்பெறுமா என எதிர்பார்க்கவும் துவங்கினர்.
இந்நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணி முதல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் இந்த கூட்டத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தின் கீழ் நடைபாதையில் வியாபாரம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழில் புரிபவர்கள், தினசரி கூலி வேலை செய்யும் பெண்கள், சிறிய நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் வேலை செய்யும் பெண்கள் பெரிதும் பயன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: இளம் பெண்ணின் சிகிச்சைக்காக கால்பந்து போட்டி நடத்திய கோத்தகிரி கிராம மக்கள்!