சென்னை: நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 15) 77-ஆவது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மாநில அரசு சார்பாக புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வை நேரில் பார்ப்பதற்காக பல முக்கியஸ்தர்கள் அங்கு குழுமியிருந்தாலும், பள்ளிச் சீறுடையில் மாணவர் ஒருவர் தமிழக முதலமைச்சரின் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். ராமநாதபுர மாவட்டம் பாப்பனம் கிராமத்தை சேர்ந்த மூன்றாம் வகுப்பு பயிலக்கூடிய எட்டு வயது சிறுவன் லிதர்சன் தான் அந்த சிறப்பு விருந்தினர்.
இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தமிழக முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் "இன்னும் சில தினங்களில் சுதந்திர தினம் வரவுள்ளது. நீங்கள் தேசிய கொடியேற்றுவதை நான் நேரில் பார்க்க வேண்டும் என கடிதம் எழுதி உள்ளார். இந்த கடிதம் முதலமைச்சர் பார்வைக்கு வந்தடைந்ததையடுத்து, பாப்பனம் பள்ளி மாணவரை நேரில் வரைவழைத்து முன் வரிசையில் அமர வைத்து அந்த மாணவனின் கனவை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி உள்ளார்.
எட்டு வயது சிறுவனின் கடிதம் என சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், எங்களை நேரில் அழைத்து எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து என் மகனின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக முதலமைச்சருக்கு நன்றி என மாணவன் லிதர்சனின் தாயார் ஆனந்தவல்லி தெரிவித்து உள்ளார்.
தமிழக முதலமைச்சர் காவல் துறையின் அணிவகுப்பை பார்வையிட்டு செல்லும் போது விருந்தினர்கள் அமரும் முன் வரிசையில் இருந்து தமிழக முதலமைச்சரை நேரில் பார்த்ததும், முதலமைச்சர் தேசிய கொடி ஏற்றியதை நேரில் பார்த்ததும் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக மாணவன் லிதர்சன் கூறியுள்ளான். மேலும் தன்னுடைய கோரிக்கையை ஏற்று கொண்டதற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி கூறிய லிதர்சன் ‘லவ் யூ தாத்தா’ எனக்கூறி தனது அன்பை பகிர்ந்து கொண்டான்.
இதையும் படிங்க: சென்னை கோட்டையில் மூவர்ணக்கொடி ஏற்றினார் முதலமைச்சர் ஸ்டாலின்!