சென்னையில் கரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் வேளையில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்றுப் பரவலைத் தடுக்க சிறப்பு அலுவலர்கள் குழு ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார்.
மருத்துவர் ராஜேஷ் குமார், முனைவர். கார்த்திகேயன், அபாஷ் குமார், பாஸ்கரன் ஆகியோர் கொண்ட இந்த சிறப்புக் குழு பல்வேறு தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதனிடையே, மண்டல வாரியாக கரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகளைக் களத்தில் ஒருங்கிணைத்து செயல்படுத்த கூடுதலாக இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், இந்திய காவல் பணி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நேற்று அம்மா மாளிகையில் இந்த சிறப்பு அலுவலர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இதில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது தொடர்பான நடவடிக்கைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகியோருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான பாதுகாப்பு வரைமுறைகளைச் செயல்படுத்துதல், மருத்துவமனை மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட அலுவலகங்களைக் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்தல், வைரஸ் நோய்த் தொற்று கண்டறியும் சோதனைகளை அதிகப்படுத்துவது, பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்டறிதல் போன்ற பணிகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் சென்னை மண்டல சிறப்பு குழு அலுவலர்கள், காவல் ஆணையர் விஸ்வநாதன், இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள், இந்திய காவல் பணி அலுவலர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் இதுவரை கரோனாவிலிருந்து 1,258 பேர் பூரண குணம்!