சென்னை: ஆன்லைன் சூதாட்டம் விளையாட தெரியாத போலீசார், அவற்றை விளையாட பழகிக்கொண்டு பொதுமக்கள் எவ்வாறு இதனால் ஈர்க்கப்பட்டு ஏமாற்றப்படுகின்றனர் என ஆய்வு செய்ய தமிழக சிபிசிஐடி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இதன் மூலம், ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பதற்கானப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
காவல்துறையில் ஒவ்வொரு வழக்கையும் விசாரணை செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும்போது, அதில் சில சுவாரசியமான சம்பவங்கள் அல்லது தகவல்கள் வெளியாகும். அதேபோல தான், சிபிசிஐடி போலீசார் (Tamil Nadu CB-CID) விசாரணை நடத்தி வரும் ஆன்லைன் சூதாட்ட வழக்குகளில் (Online gambling case) சில சுவாரஸ்யமான தகவல்கள் இன்று (ஜன.3) வெளியாகி உள்ளன.
ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக, ஏராளமானோர் பணத்தை இழந்து கடன் வாங்கி, நிதி நெருக்கடிகளுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட 17 வழக்குகளை, கடந்த ஆகஸ்ட் மாதம் டிஜிபி சைலேந்திரபாபு, சிபிசிஐடி விசாரிக்குமாறு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் ஆன்லைன் சூதாட்டத்தை விளையாடி பணத்தை இழந்து மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டவர்கள் குறித்த 17 வழக்குகளை சிபிசிஐடி போலீசார் கையில் எடுத்து விசாரித்து வருகின்றனர். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் முதலில் சிறிய தொகைகளை வைத்து விளையாடுபவர்களை நல்ல லாபம் பார்க்க வைத்து, பின்னர் படிப்படியாக கட்ட வேண்டிய பந்தயத் தொகையை அதிகரித்து, இறுதியில் மிகப்பெரிய தொகைகளை கட்டி விளையாண்டு எதிராளியிடம் இருந்து மொத்த பணத்தையும் சுருட்டிவிடும் வேலையை இந்த ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன.
ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் அவர்களுடைய விளையாட்டுகளை எப்படி அமைத்திருக்கிறார்கள்? அவர்கள் கொடுக்கக்கூடிய பலன்களை எப்படி அமைத்து இருக்கிறார்கள்? எந்த கட்டத்தில் விளையாடுபவர்களிடமிருந்து பணத்தை பறிக்கத் தொடங்குகிறார்கள்? எதிர்பக்கம் விளையாடுவது கம்ப்யூட்டரா? (அ) மனிதரா? உள்ளிட்ட பல சந்தேகங்கள் இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டு வரும் காவல்துறை அதிகாரிகளுக்கு எழுந்துள்ளன.
முதல் கட்டமாக, உயிரிழந்த 17 பேர் விளையாடிய விளையாட்டு நிறுவனங்களான ட்ரீம் லெவன்(Dream Eleven), ரம்மி(Rummy), ரம்மி கல்ச்சர்(Rummyculture), லூடோ(Ludo), பப்ஜி(PUBG) உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டம் நிறுவனங்களுக்கு இந்த வழக்குத் தொடர்பாக சுமார் 20 கேள்விகளை கேட்டு அதற்கு விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
அதே வேளையில் வழக்கை இன்னும் தீவிரமாக கையாள வேண்டும் என்றால் அவர்கள் எப்படி விளையாட்டுகளை அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்வதற்காக சிபிசிஐடி காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த வழக்குகளை விசாரிக்க கூடிய அதிகாரிகளை ரம்மி, ரம்மி கல்ச்சர், லூடோ, ட்ரீம் லெவன் உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடுமாறு உத்தரவிட்டிருக்கின்றனர்.
ஆன்லைன் கேம் விளையாட்டில் போலீசார்: அதன்படி ஒவ்வொரு அதிகாரியும் இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஃபோனில் தரவிறக்கம் செய்து, அதில் மிகச்சிறிய அளவிலான தொகைகளை கட்டி விளையாண்டு வருகிறார்கள். மேலும், ரம்மி விளையாடத் தெரியாத அதிகாரிகளை, ரம்மி விளையாட்டை கற்றுக்கொண்டு விளையாட சொல்லி அறிவுறுத்தி இருக்கிறார்கள். இதனால், ரம்மி விளையாடத் தெரிந்த அதிகாரிகளிடம், தெரியாத அதிகாரிகள் கற்றுக்கொண்டு வருகிறார்கள். தெரிந்தவர்கள் விளையாடத் தொடங்கி உள்ளனர்.
இதன் மூலமாக, தமிழக சிபிசிஐடி போலீசார் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை சாதாரண நபர்கள் போன்று உள்ளே இறங்கி கண்காணித்தும், விளையாண்டும் வருகிறார்கள். சமீபத்தில் ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக, தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த வழக்கு குறித்தும், விசாரணைகள் குறித்தும் டிஜிபியிடமும், சிபிசிஐடி உயரதிகாரிகளிடமும் பல கேள்விகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
பின்னர், ஆன்லைன் விளையாட்டை தமிழகத்தில் தடை செய்வதற்கான அனைத்து ஆதாரங்களையும் விசாரணைகளையும் சிபிசிஐடி அதிகாரிகள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும், சிபிசிஐடி அதிகாரிகள் கொடுக்கும் ஆதாரங்கள் தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டை தடை செய்ய வழிவகை செய்யும் உள்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: Online Gaming; ஒழுங்குபடுத்தும் வரைவு விதிமுறையை வெளியிட்டது மத்திய அரசு