சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று(ஜூலை 22) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை உயர்வு, கலைஞர் மகளிர் உரிமை தொகை, மணிப்பூர் விவகாரம், அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிகள் குறித்து நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, "சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. முதியோர் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கும் உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த திட்டத்தின் கீழ் 30 லட்சத்து 84 ஆயிரம் பேர் பயன்பெற்று வருகின்றனர். புதிதாக முதியோர் உதவி தொகை பெறுவதற்கு 74 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் தகுதியானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கு இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டிற்கு 845 கோடி கூடுதலாக செலவாகும். கைத்தறி, தொழிலாளர் நல வாரியம் உள்ளிட்ட 18 அமைப்புசாரா வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடியவர்கள், இதில் பயன் பெறுவார்கள். தொழிலாளர் நலவாரியத்தில் இருக்கக்கூடிய 1.34 லட்சம் பேர் இதில் பயன்பெறுவார்கள். மேலும் கட்டிட தொழிலாளர்களுக்கும் பயன்பெறுவார்கள்.
இதையும் படிங்க: மதுரை வளையல்காரத் தெருவும்.. ஆடி மாத அம்மன் வழிபாடும் - ஓர் சிறப்புப் பார்வை!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதற்கான முகாம்கள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 24ஆம் தேதி முதல் தமிழக முழுவதும் இந்த முகாம்கள் செயல்படும். நியாய விலை கடைகளில் முதல் கட்டமாக 21,031 முகாம்கள், இரண்டாம் கட்டமாக 14, 893 முகாம்கள் நடைபெற உள்ளன. 35000-க்கு மேற்பட்ட முகாம்கள் இரண்டு கட்டமாக செயல்பட திட்டமிட்டுள்ளோம். இந்த முகாம்களில் விரிவான ஆவணங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் முதியவர்களுக்கான உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என கூறியபடி அடுத்தடுத்து உயர்த்தி வழங்கப்படும். மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது" என கூறினார்.
இதையும் படிங்க: மைக்ரோவேவ் ஓவன் பாத்திரங்களால் ஆபத்து: ஆய்வாளர்கள் கூறுவது என்ன?