சென்னை: சுமதி வெங்கடேசன். இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, தனது மகளுடன் காரில் கட்சித் தலைமை அலுவலகமான கமலாலயம் நோக்கிச் சென்றுகொண்டிருந்துள்ளார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் இருவர், காரை வழிமறித்து கண்ணாடிகளை உடைத்து, தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சுமதி வெங்கடேஷ், அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
கொலை முயற்சி நடவடிக்கை எடுக்க புகார்
புகாரின் அடிப்படையில், இருவரை கைதுசெய்த காவலர்கள், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவர் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க, சுமதி வெங்கடேசன் இன்று (ஜூலை 21) காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரளித்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கடந்த 19ஆம் தேதி என் வீட்டிலிருந்து நானும், என் மகளும் தி. நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு, காரில் சென்றுகொண்டிருந்தோம்.
ஆபாசமாகப் பேசி தாக்கிய நபர்கள்
அப்போது சென்னை அமைந்தகரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், காரின் மீது மோதி வழிமறித்து கார் கண்ணாடிகளைத் தாக்கி உடைத்து, ஆபாச வார்த்தைகளைப் பேசி எங்களைக் கொன்றுவிடுவோம் என மிரட்டினர்.
இதையடுத்து அந்த நபர்களை காணொலியாகப் பதிவுசெய்த எனது மகளையும் கொன்று புதைத்துவிடுவோம் என மிரட்டினர்.
மேலும் என் காரின் முன் பொருத்தப்பட்டிருந்த கொடியைப் பிடுங்கி எரிந்து, கட்சிப் பிரமுகர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டினர். அதுமட்டுமல்லாமல் என் ஓட்டுநர் கருப்பசாமியை அடித்து, கீழே தள்ளி, அவர் தலையில் கல்லைத் தூக்கிப் போட முயன்றனர்.
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிப்பு
இது தொடர்பாக அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரின்படி இருவரை கைதுசெய்த காவல் துறையினர், அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது கொலை முயற்சி, பொது சொத்துகளைச் சேதப்படுத்தியது, பெண்களை இழிவான வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் - அமைச்சர் கே.என்.நேரு