டெல்லி: தமிழ்நாடு பாஜகவின் மூத்த தலைவரும், பாஜக முன்னாள் எம்பியுமான சிபி ராதாகிருஷ்ணன்(65) ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். பாஜகவுக்காக உழைத்த தமிழிசை செளவுந்தரராஜன், இல கணேசன் ஆகியோர் ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில், அந்த வரிசையில் தற்போது சிபி ராதாகிருஷ்ணனும் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் கல்லூரிக் காலங்களிலேயே ஆர்எஸ்எஸ் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அந்த அமைப்புடன் இணைந்து பணியாற்றி வந்தார். தேசியவாத கொள்கைகள் மீதும் ஈர்ப்பு கொண்டிருந்த சிபி ராதாகிருஷ்ணன் பாஜகவில் ஒரு சாதாரண உறுப்பினராக சேர்ந்து படிப்படியாக உழைத்து முன்னேறினார்.
கட்சியைக் கடந்தும், கொங்கு மண்டலத்தில் தனக்கென தனி செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். இதையடுத்து கடந்த 1998ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பின்னர் நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். இதைத்தொடர்ந்து கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்தார். அக்கட்சியின் மாநில தலைவராகவும் உயர்ந்தார். மாநிலத் தலைவராக இருந்தபோது கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை பாதை யாத்திரை சென்றார். இந்த யாத்திரை பாஜகவின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமைந்தது. நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், வணிகக் குழு உறுப்பினராகவும், நிதி அமைச்சக ஆலோசனைக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார்.
கடந்த 2004, 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல்களில் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், அகில இந்திய கயிறு வாரியத்தின் தலைவராக பதவி வகித்தார். தற்போது பாஜகவின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினராக செயல்பட்டு வரும் சி.பி. ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஜார்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம்