சென்னை: தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு இன்று (ஏப்ரல் 6) தொடங்கி நடைபெற்று வருகிறது. துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இதில் கேள்வி நேரத்தின் போது, அதிமுக பொள்ளாச்சி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், போடிபாளையம் ஊராட்சி , புது காலனியில் பட்டா வழங்கப்பட்டவர்களுக்கு நில அளவை செய்து தர அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், "போடிபாளையம் ஊராட்சி, புது காலனியில் 28 நபர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் நில அளவை செய்ய முடியவில்லை என வட்டாட்சியர் கூறியுள்ளார்.
அங்கு நிலவும் பிரச்சனை சுமூகமாக முடிந்த பின் நில அளவை செய்து தரப்படும். மூதாதையர் காலத்திலிருந்து அப்பகுதியிலேயே வாழும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மூன்று லட்சம் பேருக்கு பட்டா வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: மீண்டும் கூடும் சட்டப்பேரவை: திமுகவிற்கு எதிராக பல்வேறு பிரச்னைகளை வைக்கத் தயார் நிலையில் எதிர்க்கட்சிகள்