ஒவ்வொரு ஆண்டும் தேசிய திரைப்பட விருதுகள் மத்திய அரசின் தகவல், ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் வழங்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் இந்தாண்டுக்கான 66ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 31 பிரிவுகளில் சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்தாண்டு முதன் முறையாக படப்பிடிப்பிற்கு ஏற்ற மாநிலம் என்ற புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் தமிழில் சிறந்த படமாக 'பாரம்' தேர்வு செய்யப்பட்டுள்ளது. இப்படத்தினை பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.
இந்நிலையில், சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக பேசப்பட்ட 'பரியேறும் பெருமாள்' பார்வையாளர்கள், விமர்சகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய படம். அதேபோல், விஷ்ணு விஷால் நடிப்பில் திரைக்கதை மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட படம் 'ராட்சசன்', அழிந்துவரும் விவசாயத்தையும் மக்களிடையே புரையோடிக் கிடக்கும் கிரிக்கெட் மோகத்தையும் இணைத்து நடிகர் சத்யராஜ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளிவந்து கண்முன் நிறுத்தியது 'கனா' .
மேலும், இயக்குநர் ராமின் 'பேரன்பு', ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த 'சர்வம் தாளமயம்', 'இரும்புத்திரை', 'சூப்பர் டீலக்ஸ்', '96' போன்ற படங்களும் விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட படங்கள். இப்படி வரிசைக் கட்டிக்கொண்டு வெளியான ஒவ்வொரு படமும் பல விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தமிழ் திரை உலகில் உள்ள பிரபல இயக்குநர்களுக்கு விருதுகள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
திரைப்படங்களை தேர்வு செய்யும் கமிட்டி குழுவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறன்வாய்ந்த ஆளுமைகள் இல்லாததே இதற்கு காரணம் என்று பலர் கூறுகின்றனர். இதனையடுத்து, இந்த ஆண்டில் வழங்கப்பட்ட தேசிய விருதுகளில் தமிழ்ப் படங்கள் வெகுவாக புறக்கணிக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றன.