சென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். 2023 - 2026ஆம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது.
இந்த தேர்தலில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி மற்றும் தயாரிப்பாளர் உரிமை காக்கும் அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. தலைவர் பதவிக்கு தேனாண்டாள் முரளி மற்றும் மன்னன் ஆகியோர் போட்டியிட்டனர். ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் தலைமையில் நடந்த இந்த தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 9.15 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது.
இதையும் படிங்க: Sarathkumar: பொன்னியின் செல்வன்-2 விவகாரத்தில் அப்செட்டா? நடிகர் சரத்குமார் விளக்கம்!
திரைப்பட நட்சத்திரங்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, சுஹாசினி ஆகியோர் வாக்களித்தனர். இந்நிலையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட தேனாண்டாள் முரளி (615) தன்னை எதிர்த்து போட்டியிட்ட மன்னனை (482) விட அதிக வாக்குகள் பெற்றதால் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் தேனாண்டாள் முரளி என்.இராமசாமி தலைமையில் போட்டியிட்ட தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணியின் துணைத்தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 'தல' அஜித் போட்டோவை தலையால் வரைந்த ஓவியரின் அசத்தல் வீடியோ!