சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்டு வந்த ஆறு பாட வகுப்புகளை, நான்கு வகுப்புகளாக ஆட்சிமன்றக்குழு ஒப்புதலுடன் குறைக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி கூறும்பொழுது, “சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் ஆறு பாட வகுப்புகள் நடத்தப்பட்டன. நான் துணைவேந்தராக பொறுப்பேற்பதற்கு முன்னர் நடைபெற்ற ஆட்சி மன்ற குழுக்கூட்டத்தில் தமிழ் பாடப் பிரிவுகள் நான்கு பிரிவுகளாக குறைக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
அதில் தொழிலுக்கான ஆங்கிலம் என்ற புதிய ஆங்கில பாடத்தை இளங்கலை முதல் பருவத்தில் 2020- 21ஆம் கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தி நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி குழு பரிந்துரை செய்தது. இதைத் தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகம் தனது பல்வேறு குழுக்களில் விவாதித்து ஆட்சி மன்ற குழு ஒப்புதலுடன் அடிப்படை தமிழ் என்ற இரண்டு மணி நேரத்திற்கு பதில், தொழிலுக்கான ஆங்கிலம் என்ற நான்கு மணி நேர பாடத்தை அறிமுகப்படுத்தியது.
இதில் உரிய மாற்றம் செய்ய வேண்டும் என தமிழ் பேராசிரியர்கள் தெரிவித்தனர். அதனடிப்படையில் மீண்டும் அடிப்படை தமிழ் பாடத்தை நடத்துவது என்று சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. மேலும் தொழிலுக்கான ஆங்கில பாடத்திற்கான நேரத்தை ஒதுக்குவது எப்படி என்பது குறித்து ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் தீர்மானித்து செயல்படுவோம்” என தெரிவித்தார்.