தமிழ்நாடு அரசியலின் முகங்களாக திரைத்துறையிலிருந்து வந்தவர்களே இருக்கின்றனர். முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா போன்றோரும் அங்கிருந்து வந்தவர்கள்.
அதில், அண்ணாதுரையும், கருணாநிதியும் கதை ஆசிரியர்களாகவும், வசனகர்த்தாவாகவும் சினிமாவில் இருந்தனர். மேலும், இருவரின் வசனங்களை உச்சரித்தே எம்ஜிஆர் திரையில் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்ந்தார்.
அண்ணாவின் மறைவுக்கு பிறகு கருணாநிதியுடன் எழுந்த மோதலால் எம்ஜிஆர் தனியாக அதிமுகவை தொடங்கினார். சினிமாவில் அவருக்கு இருந்த செல்வாக்கு அரசியலிலும் அவரை அரியணை ஏற வைத்தது. அதேபோல் 140 திரைப்படங்களில் நடித்த ஜெயலலிதா, அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு, நான்கு முறை முதலமைச்சராக பதவி வகித்தார்.
தற்போதைய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவிலிருந்து அரசியலுக்கு வருபவர்களின் பட்டியல் தற்போதும் தொடர்கிறது. கமல்ஹாசன் கட்சி தொடங்கி, சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார்.
ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் திரைப்படங்களில் நடித்து அரசியலுக்கு வந்து திமுகவின் இளைஞரணி செயலாளராக உள்ளார். அவரும் இந்தத் தேர்தலில் சேப்பாக்கத்தில் போட்டியிடுகிறார்.
அதேபோல் நடிகை குஷ்பு பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியிலும், ஸ்ரீப்ரியா மக்கள் நீதி மய்யம் சார்பில் மயிலாப்பூரிலும், பாடலாசிரியர் சினேகன் விருகம்பாக்கத்திலும் போட்டியிடுகின்றனர்.
அரசியலுக்குள் நுழைவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த்,தேர்தல் அறிவிப்பு வருவதற்கு சில நாள்களுக்கு முன்பு அரசியலுக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்து அமைதி ஆகிவிட்டார்.