சென்னை: தமிழ்நாட்டில் தற்போது இளைஞர்கள், இளம்பெண்களை குறிவைத்து அவர்களின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டும் புதுவகையான சைபர் குற்றங்கள் பெருகி வருகின்றன.
இதுபற்றி சைபர் கிரைம் போலீசார் கடந்த சில நாட்களில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். அவசரத்திற்குக் கடன் வாங்க, சில குறிப்பிட்ட கடன் பெறும் செயலியை (Loan APP) பதிவிறக்கம் செய்யும்போது தங்களின் தனிப்பட்ட விவரங்கள் (நண்பர்கள் & உறவினர்களின் செல்போன் எண், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்) சைபர் கிரைம் குற்றவாளிகளால் திருடப்படுகிறது.
கடன் கொடுத்த தொகை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் திருப்பி செலுத்தவேண்டும் எனவும், சிலருக்குப் பணம் அனுப்பியதாக பொய் சொல்லியும் பணம் வசூலிக்கின்றனர். மேலும் ஆண் அல்லது பெண் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களோடு மார்ஃபிங் செய்து, அவர்களுக்கோ அல்லது அவர்களது பெற்றோர், உறவினர், நண்பர்களின் செல்போனுக்கோ அனுப்பி பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.
எந்த மொபைல் ஆப்களை பயன்படுத்தவேண்டாம்: எனவே, செல்போன் உபயோகிக்கும் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் Rupee Tree, Flexi loan, Alexandria, Rupee way, City loan, Evault Masen rupee, Fast coin, Wingo loan, lory loan, Smart cash போன்ற Loan App-யை Download செய்யவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையம் சென்று புகார் அளிக்கவும் கேட்டுக்கொண்டார். மேலும் கடன் பெறுவதற்கான "APP”ஐ பயன்படுத்துவது சம்பந்தமாக காவல் ஆணையர் விழிப்புணர்வு குறிப்புகளை வெளியிட்டுள்ளார்.
’கடன் தருவதாகக்கூறி SMS, e-mail அனுப்பும் அழைப்புக்குப் பதில் அளிக்க வேண்டாம். மோசடி செய்பவர்கள் மெசேஜ், மின்னஞ்சல், WhatsApp மூலம் '0% வட்டியில் பணம் தருவதாகக் கூறி மெசேஜ் அனுப்புவார்கள். அதை கிளிக் செய்ய வேண்டாம்.
அதிகாரிகள் என்றும், BANK மற்றும் நிதி நிறுவன ஏஜெண்ட்கள் என்றும் கூறி தங்களை அறிமுகப்படுத்துவார்கள். கடன் வழங்குபவர்கள் இணையதளம் மூலம் மட்டுமே கடன் தருவதாகக் கூறி தங்களின் செல்போன் எண், ஆதார் கார்டு மற்றும் OTP எண் ஆகியவற்றை வாங்க முயற்சி செய்வார்கள்.
குற்றவாளிகள் இந்த APPஐ பயன்படுத்துபவர்களின் Photo-வை வாங்கி அதை நிர்வாணப்படமாக மார்ஃபிங் செய்து இணையத்திலும் GROUP-லும் வெளியிடுவோம் என அச்சுறுத்துவார்கள்.
பொதுமக்கள் தங்களின் செல்போன் எண், அடையாள சான்று, முகவரி சான்று ஆகியவற்றை சமூக ஊடகத்திலோ அல்லது INTERNET-ல் இந்த APP-ல் பயன்படுத்த வேண்டாம். குற்றவாளிகள் உங்கள் வங்கிக் கணக்கின் தகவல்களைப் (Bank Account Details) பெற்று அதன் மூலம் பணத்தை உங்களுக்குத் தெரியாமல் எடுத்துவிடுகிறார்கள். கடன் தொகை அனுமதிக்கப்பட்டதாகக் கூறினால் கடனளிப்பவரிடமிருந்து பணத்தையும் அனுமதி கடிதத்தையும் உடனடியாக பெற வேண்டும்’ என்று தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வேகமாகப் பரவும் பிஏ 4, பிஏ5 வகை கரோனா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்