சென்னை: இந்தியாவின் முன்னணி இசை அமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான் 'மறக்குமா நெஞ்சம்' என்னும் தலைப்பில் சென்னையில் கடந்த மாதம் 12ஆம் தேதி இசை நிகழ்ச்சி ஒன்று நடத்த திட்டமிடப்பட்டது. அதன்பின் இசை நிகழ்ச்சியானது மழையின் காரணமாக திட்டமிட்டபடி நடத்த முடியாமல் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அந்த நிகழ்ச்சியானது செப்டம்பர் 10ஆம் தேதி நடத்தப்படும் என்றும், ஏற்கனவே வாங்கிய டிக்கெட்களை ரசிகர்கள் காண்பித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று (செப்.10) சென்னை பனையூர் அடுத்த உத்தண்டி பகுதியில் ஆதித்தியாராம் எனும் தனியார் அரங்கில் ‘மறக்குமா நெஞ்சம்’ தலைப்பில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் இந்த பகுதியில் திரண்டு வந்ததால் கடுமையானப் போக்குவரத்து நெரிசல் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும், வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி, இருக்கை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக ஏற்படுத்தாமல் இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பொதுமக்கள் புலம்பிக்கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: பயணிகளின் பணிவான கவனத்திற்கு: சென்னை சென்ட்ரலில் புறப்படும் சில ரயில்கள் ரத்து!
பல ரசிகர்களிடம் டிக்கெட்டுகள் இருந்தும் உள்ளே அனுமதிக்காததால் விரக்தியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை திட்டிக் கொண்டே அங்கிருந்து வெளியேறினர். இது போன்ற மோசமான நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளார்கள் என ரசிகர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் முதலமைச்சர் கான்வாய் வாகனமும் சிக்கியது.
இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சிக்கு முறையான அனுமதி பெற்றுள்ளார்களா அங்கு ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து நேரில் சென்று விசாரணை நடத்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜிக்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் நிகழ்விடத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் கூறியதாவது, "இசை நிகழ்ச்சி ஏற்பாடு கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது. எதிர்பார்த்ததை விட அதிக கூட்டம் இருந்தது. 25,000 இருக்கைகள் போடப்பட்டது. 40,000 பேர் வரை வந்ததாக தெரிகிறது. சொந்த வாகனங்களில் அதிகபடியானோர் வந்ததால் வாகனங்களை தடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. குளறுபடிகான காரணம் குறித்து விசாரிக்கவும், ஏற்பாடுகள் குறித்தும் விசாரணை செய்யப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:இரவு நேர பயணங்களை தவிர்க்க வேண்டும் - விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பின் எ.வ.வேலு பேட்டி!