சென்னை: தமிழ்நாட்டில் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று (ஜன.11) வெளியிடப்பட்டது.
அதனை திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளும் தாம்பரம் மாநகராட்சி ஆணையரிடம் இருந்து பெற்றுக்கொண்டனர். வாக்காளர் பட்டியலில் பிழைகள் இருப்பின் அதனை சுட்டிக்காட்டுங்கள் என ஆணையர் இளங்கோவன் கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி ஆணையர் இளங்கோவனை, அம்பேத்கர் தலித் கூட்டமைப்பு சார்பில் அதன் பொதுச் செயலாளர் ரகுநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் சந்தித்தனர்.
![Tambaram Corporation Mayor Post need to allocate downtrodden people, தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியை தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கவேண்டும்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-requesttoassignthepostofmayoroftambaramcorporationtoschedulefcast_12012022073132_1201f_1641952892_893.png)
அப்போது, புதியதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சியில் உருவாக்கப்பட்ட 70 வார்டுகளில் பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் போட்டியிட வசதியாகத் தனி வார்டுகளாக அறிவிக்கவேண்டும்.
இதுபோல் தாம்பரம் மாநகராட்சி பகுதியில் 50 சதவீதத்திற்கும் மேல் பட்டியலின மக்கள் வசிப்பதால் மாநகராட்சி மேயர் பதவியை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் திருவுருவ சிலை அருகே உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: ”முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு விவகாரம் : மாநில பட்டியலில் இருந்து ஏன் மாற்றக்கூடாது?”- ஹெச்.ராஜா கேள்வி