உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட கொலிஜியம் குழு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணியை, மேகாலயா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதேபோன்று தற்போது மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள அஜய்குமார் மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாறுதல் செய்யவும் மத்திய அரசுக்கு கொலிஜியம் குழு பரிந்துரை செய்தது.
இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற கொலிஜியம் குழுவுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.
இந்த நிலையில், தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்த 75 வழக்குகள் விசாரிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்று காலை தலைமை நீதிபதி தஹில் ரமாணியை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நேரில் சந்தித்து பேசியதாகவும், அப்போது தலைமை நீதிபதியின் ராஜினாமா முடிவு, சட்டப்பணிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவை திரும்பப் பெற பரிசீலிக்குமாறு வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.