ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு மாத்திரை வழங்கப்பட்டிருந்தது. அந்த மாத்திரையை உடைத்து பார்த்ததில் இரும்பு கம்பி இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுகுறித்து மருத்துவத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட அந்த மாத்திரையானது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையால் தடை செய்யப்பட்ட மாத்திரை என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இது குறித்து தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில செயலாளர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சிப்ரோஃபோலசின்(Ciprofloxacin) மாத்திரைகள் தடை செய்யப்பட்டதல்ல. அந்த மாத்திரை ஒரு ஆன்ட்டிபயாடிக். அதனை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்த மூலக்கூறுகளோடு மற்ற இரண்டு மூலக்கூறுகள் (multi dose combinations) கொண்ட மாத்திரைகளை தான் அரசு தடை செய்துள்ளது.
இவற்றோடு சேர்த்து கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு 300க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சுகாதாரத்துறை தடை செய்துள்ளது. அந்தப் பெண்மணி எடுத்துக் கொண்ட மாத்திரை தடை செய்யப்பட்டதல்ல. அந்த மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரையின்படி எடுத்துக் கொள்ளலாம். இரும்பு கம்பி விவகாரம் குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்பே அது குறித்து பேச முடியும்", என்று விளக்கம் அளித்துள்ளார்.