எப்போதும் ஏறுமுகமாக இருக்கும் தொழிலில் ஒன்று உணவு தொடர்பானது. இந்நிலையில், கரோனா நெருக்கடியில் இந்தத் தொழிலும் பெரும் சரிவைச் சந்தித்தது.
அதன் வெளிப்பாடுதான் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி சமீபத்தில் 1,100 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து அறிவித்தது.
கரோனா ஊரடங்கால் உணவு விநியோகப் பணிகள் பெருமளவு முடங்கியுள்ளதால், தாங்கள் இம்முடிவை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஸ்விகி நிறுவனம் முன்னதாக இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
வருவாய் இழப்புகள் தொடரும் பட்சத்தில் இதுபோன்ற இக்கட்டான முடிவுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்நிறுவனம் கூறியது.
இந்நிலையில், தற்போது ஊழியர்களின் ஊதியம், ஊக்கத்தொகை போன்றவற்றையும் ஸ்விக்கி நிறுவனம் குறைத்துள்ளது. இது பணியாளர்களிடையே பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சென்னையில் உள்ள சுமார் பத்து ஆயிரம் ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் கடந்த ஆறு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊழியர்கள் தரப்பு
வாடிக்கையாளர்களுக்கு உணவு பொருள்களை வீடு தேடிச் சென்று விநியோகம் செய்யும் பணியாளர்களுக்கு ஒரு ஆர்டருக்கு வழங்கப்படும் படி அண்மையில் குறைக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து நூற்றுக்கணக்கான ஸ்விக்கி டெலிவரி ஊழியர்கள் முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து மனு அளிப்பதற்காக நேற்று (ஆக19) தலைமை செயலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
கரோனாவில் பேரணிக்கு நோ?
கரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஏராளமானவர்கள் ஒன்றுகூடக் கூடாது என்று கூறிய காவல்துறையினர், அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.
ஸ்விக்கி ஊழியர்களிடம் இருந்து மனுவை பெற்று முதலைமைச்சரிடம் வழங்குவதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். பின்னர் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி ஸ்விக்கி ஊழியர்கள் கலைந்து சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய சென்னை மயிலாப்பூர் மண்டலத்தில் பணியாற்றும் ஸ்விக்கி டெலிவரி ஊழியர் ஒருவர், "2 ஆண்டுகளுக்கு மேலாக ஸ்விக்கியில் பணியாற்றி வருகிறேன். 3 கிமீ., தூரம் கொண்ட ஒரு உணவு டெலிவரிக்கு 35 ரூபாய் வழங்கினர். தற்போது அதனை 15 ரூபாயாக குறைத்துள்ளனர். முன்பு இது 46 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக குறைக்கப்பட்டது. அப்போது நாங்கள் போராடவில்லை.
ஆனால் தற்போது நெருக்கடியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். நாள் முழுவதும் வேலை செய்தாலும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை எனும் போது போராடத் தொடங்கிவிட்டோம். சுமாராக 8 கி.மீ., சென்று வந்தால் 20 ரூபாய் தருகிறார்கள். இது எப்படி போதுமானதாக இருக்கும்” என்றார்.
இது தவிர ரெஸ்டாரென்ட் சார்ஜ், கஸ்டமர் டச்பாயிண்ட், வெயிடிங் சார்ஜ், மழையில் டெலிவரி செய்யும்போது கொடுக்கும் கூடுதல் தொகை என அனைத்து விதமான ஊக்கத்தொகையையும் குறைத்ததாகவும் குறைக்கப்படுகிறது.
இது குறித்து ஸ்விக்கி ஊழியர் பேசுகையில், “சில நாள்களுக்கு முன்பு வாடிக்கையாளர் ஒருவர் 50 ரூபாய் டிப்ஸ் கொடுத்ததாகக் கூறினார். ஆனால் எனக்கு செயலியில் வெறும் 20 ரூபாய்தான் வந்தது. இதைக்கூட எங்களிடம் இருந்து எடுத்துக்கொள்கிறார்கள். கரோனா தொற்று காலத்திலும் மக்களின் பசியாற்ற தொடர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் எங்களது வருவாயை குறைக்கிறார்கள். நிறுவனத்தை தொடர்பு கொண்டு எங்கள் கோரிக்கையை முன்வைக்கலாம் என முயன்றால் யாரைத் தொடர்பு கொள்ளவது என்றும் தெரியவில்லை”என்றார்.
ஸ்விக்கி ஊழியர்கள் அந்நிறுவனத்தின் மீது மற்றொரு முக்கிய குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றனர். கரோனா காலத்தில் பணியாற்றும் ஸ்விக்கி ஊழியர்களுக்கு உதவுவதற்காக பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்து நிறுவனம் பணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் பணத்தை வைத்து ஸ்விக்கி டெலிவரி ஊழியர்களுக்கு மளிகை சாமான்கள் கொடுத்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், தங்களுக்கு இரண்டு மாஸ்க் மற்றும் சானிடைசர் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள ஸ்விக்கி ஊழியர்களுக்கு மளிகை சாமான்கள் வழங்கப்படவில்லை என்றே கூறுகின்றனர். குறிப்பாக, போராட்டம் நடத்துபவர்களை கண்டறிந்து, அவர்களது ஐடியை பிளாக் செய்து பணி செய்யவிடாமல் செய்வதாவும், சுமார் 500-க்கும் மேற்பட்டவர்களின் ஐடி இதுபோல பிளாக் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஸ்விக்கி நிறுவனம் மறுப்பு
ஸ்விக்கி ஊழியர்களின் அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஸ்விக்கி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஸ்விக்கி நிறுவன செய்தித் தொடர்பாளர் நம்மிடம் கூறுகையில்,” ஒரு ஆர்டருக்கு வெறும் 15 ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது.
ஊடகங்களின் அனுதாபத்தைப் பெற இதுபோன்று பேசி வருகின்றனர். ஒரு டெலிவரி செய்தால் பல்வேறு மதிப்பீடுகளின் அடிப்படையில் அவர்களுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. சிலர் ஒரு ஆர்டருக்கு 45 ரூபாயும், மிகவும் சிறப்பாக செயல்படுபவர்கள் 100 ரூபாய் வரைகூட ஒரு ஆர்டரில் சம்பாதிக்கின்றனர்” என்றார்.
உணவு விநியோகம் செய்யும் ஊழியர்கள் ஸ்விக்கி நிறுவனத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். கடினமான காலத்திலும் அவர்களுக்கு உரிய வகையில் ஊதியம் வழங்கி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 40 ஆயிரம் விநியோக ஊழியர்களுக்கு 18 கோடி ரூபாய் அளவுக்கு உதவி செய்ததாக ஸ்விக்கி பதிலளித்துள்ளது.
ஆனால் இன்றும் ஸ்விக்கி ஊழியர்கள் போராட்ட களத்தில்தான் நிற்கின்றனர். ஸ்விக்கி ஊழியர்களின் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல தனியொரு அமைப்பும் இல்லை. ஊழியர்களின் உரிமைக் குரலுக்கு அரசு உதவிக் கரம் நீட்டுவது காலத்தின் கட்டாயம்.
இதையும் படிங்க:அண்ணா அறிவாலயத்தில் திரண்ட ஸ்விக்கி ஊழியர்கள்!